உலகம் முழுவதும் 20 முதல் 65 வரையிலானவர்களுக்குக் கண் பார்வை இழப்பு ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது நீரிழிவு விழித்திரை நோய். இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுள் சுமார் 17.6 முதல் 28.9 சதவிகிதம் வரையிலான நபர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. நாட்டின் உழைப்புச் சக்தி குறைவதற்கும், பொருளாதார சரிவுக்கும் இந்த நோயின் பாதிப்பு மறைமுக காரணமாக அமைகிறது. 


`சிறிய வயதிலேயே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தங்கள் உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதோடு, கண்ணில் எந்தப் பிரச்னையும் இல்லாத போதும், ஆண்டுதோறும் கண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்’ என்கிறார் மருத்துவர் ராஜா நாராயணன். இவர் இந்திய விழித்திரை சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருக்கிறார். 


நீரிழிவு விழித்திரை நீரிழிவு நோயால் படிப்படியாக ஏற்படுகிறது. கண்ணின் பின்புறத்தில் உள்ள விழித்திரையில் இது பாதிப்பு ஏற்படுத்துகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள ரத்த நாளங்களில் ரத்தக் கசிவு ஏற்படுகிறது. 



பிறரோடு ஒப்பிடுகையில் நீரிழிவு நோயாளிகளுக்குக் கண் பார்வை இழக்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், மருத்துவ நிபுணர்கள் சரியான நேரத்தில் சிகிச்சைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். 


கண் பார்வையில் தெளிவற்ற, மங்கலான நிலை ஏற்படுவது, சில நிறங்களுக்குக் கண் கூசுவது, பார்வையின் போது கரும்புள்ளிகள் தோன்றுவது, நேரான கோடுகள் வளைந்து தெரிவது, தொலைவில் இருப்பதைக் காண்பதில் சிரமம் கொள்வது, கண் பார்வை இழப்பது முதலானவை இந்த நோயின் அறிகுறிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. 


நீரிழிவு நோய், குளுகோஸ் அளவு, கொழுப்பு அளவு ஆகியவற்றைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். இதனை மேற்கொண்டால் விழித்திரை நோயைத் தடுக்க முடியும். உடலில் குளுகோஸ் அளவைக் கண்காணிக்க ஸ்மார்ட்வாச்கள் தற்போது கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி தொடர்ந்து கண்காணிக்கலாம். 



நீரிழிவு விழித்திரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் புகைப் பழக்கத்தைக் கைவிட வேண்டும், காய்கள், பழங்கள் நிறைந்த உணவு முறையைப் பின்பற்ற வேண்டும், தியானம், உடற்பயிற்சி முதலானவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். உடல் பருமன் இந்த நோயை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக இருப்பதால் வாழ்க்கை முறையில் ஏற்படுத்தும் மாற்றங்கள் இந்த நோயில் இருந்து பாதுகாப்பு தரும். 


தொடர்ந்து நீரிழிவு நோயைக் கண்காணிப்பது, கண் பரிசோதனைகளைப் போதிய இடைவேளைகளில் மேற்கொள்வது முதலானவை இந்த விழித்திரை நோய் ஏற்படாமல் இருப்பதைத் தடுக்கும். மேலும், வாழ்க்கை முறையை மாற்றுவது, பரிசோதனை செய்து விழித்திரை நோய் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தால் வழக்கமாக பரிசோதனை செய்துகொள்வது, சிகிச்சை எடுத்துக் கொள்வது முதலானவை பயன் தரும். இந்த விழித்திரை நோய் ஏற்படும் போது, மன நலப் பாதிப்புகளும் ஏற்படுவதால் அதனையும் சரியாகக் கையாள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.