இறைவனால் படைக்கப்பட்ட உயிரினங்களில் மனிதன் மட்டுமே தனக்கு தேவையான உணவை தன் நாவிற்கும் நலத்திற்கும் ஏற்றார் போல சுவைப்பட சமைத்து உண்டு வாழ்கிறான். ஆரம்பத்தில் விலங்குகள் போல கிடைத்ததை உண்டாலும் காலப்போக்கில் தட்பவெப்ப சூழ்நிலைக்கேற்ப தன் உடலுக்கு ஏற்ற வகையில் தனக்கு தேவையான உணவை தானே தேர்ந்தெடுத்து சமைத்து உண்ணும் திறனை வளர்த்தான். 


ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் சமைத்தல் என்னும் கலை அவர்களுக்கு பொதுவானதே .. வீட்டில் பெண் தான் சமைக்க வேண்டும் ஆண் ருசிக்க வேண்டும் என்பதெல்லாம் இன்று இல்லை. “ஞாயிறு மதியம் சமையல் உனது விரும்பி நீ சமைத்திடுவாய் '' என்பது போல் வேலைக்கு செல்லும் ஆணும் பெண்ணும் தங்களுக்கும் குடும்பத்திற்கும் தேவையான உணவு பதார்த்தங்களை சமைத்துப் பரிமாறிக்கொள்ளும் கலாச்சாரம் நிறைந்திருக்கவும் காண முடிகிறது.  ஆன்லைனில் ஆர்டர் செய்து பிடித்த உணவை வீட்டுக்கு வரவழைத்து சாப்பிடும் பழக்கம் பரவலாக இருந்தாலும்கூட அவ்வப்போது வீட்டில் கணவனும் மனைவியும்  சாக்குப்போக்கு சொல்லி சின்ன சின்ன சண்டைகளோட சிரித்துப்பேசி சேர்ந்து சமைத்து கொள்வதில் தங்கள் வாழ்வை அழகாய் அமைத்துக் கொள்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். 


"சமைத்தல்" என்றால் "அமைத்தல்" என்ற ஒரு பொருள் உண்டு. தமக்கு தேவையானபடி தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்வதும் தங்களுக்கு தேவையான உணவை தாமே அமைத்துக் கொள்வதுமே அது..சரி இப்ப விஷயத்துக்கு வருவோம். 


சமைத்தால் ஆயுள் விருத்தியாகுமா ? அது எப்படி ?


ஆமாம், வீடு, உணவகங்கள் இப்படி எந்த இடத்திலுமே ஆணோ பெண்ணோ சமையல் கலையை கற்றுக்கொண்டே, யார் ஒருவர் மனம் ஒருநிலைப்பட சமைக்கிறார்களோ அவர்களுக்கு ஆயுள் விருத்தியாகுமாம். காரணம் சமையல் என்பது "தவம்" செய்வது போன்று. நினைத்ததை பெற வேண்டும், கடவுளையே பெற்றிட வேண்டும் என தவம் செய்தவர்களும் உண்டு, அதனால் தன்னுள் கடவுளை உணர்ந்தும் உயர்நிலை பெற்ற ஞானிகள் பலர் உண்டு. தன் நோக்கம் ஒன்றாக வைத்து அதன் மேல் மனஒருநிலைப்படும் எந்த ஒரு செயலுமே தவம் செய்வதற்கு சமமே. 


அந்தவகையில் அரிசி , நீர், நெருப்பு, பருப்பு , காய், மசாலா, உப்பு எல்லாம் சேர்த்து ஒரு கூட்டாஞ்சோறாக பக்குவப்பட்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே கவனமாய் இருந்து மனதை ஒரு நிலைப்படுத்தி சமைக்கும் திறனும் இங்கு தவமே. 


தவத்தை வடமொழியில் “தபஸ் " என்பர், இதன் பொருள் பக்குவப்படுத்துதல். பக்குவமற்ற மனதை பக்குவப்படுத்த ஒரே நோக்கத்தில் மனதை நிலை நிறுத்துதல் போலவே. பக்குவமற்ற பச்சைக் காய்கறிகளை பக்குவமாய் சமைத்தால் ருசியான உணவாக மாறுகிறது. 


திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழ்ச்சிகளில் பெரிய கூட்டத்திற்காக  சமைக்கும் வேலையை செய்பவர்களை “தவசுபிள்ளை " என்று சொல்வது வழக்கம். அத்தனைப் பெரிய கூட்டத்திற்கும் உப்பு, புளி, காரம் அளவு பார்த்து சமைக்கும் திறனை திறம்பட செய்வதற்கு காரணமே அவர்களின் மன ஒரு நிலைப்பாடு மட்டுமே. 


சமைக்கும் போது மனம் அங்கும் இங்கும் ஓடாமல் , உப்புபோட்டோமா ? புளி கரைசல் ஊற்றினோமா ? என்ற சந்தேகமெல்லாம் வந்துவிடாமல், மனம் ஒரு நிலைப்பட்டு இருந்து சரிவர பொருள்களை சேர்த்து அமைத்து பக்குவப்படுத்தி எடுத்தால் தான் ருசியான சமையல் சாத்தியமாகும்.
"தவத்தில் தேர்ந்தோர் நீண்டநாள் வாழ்வது போல" ஒரு நாளில் அதிகமாக சமைக்கும் வேலையை செய்யும் நபர் அதனை போது அவரின் மனம் ஒருநிலைப்படும்படி சமைத்தலில் ஈடுபட "உணவும் சிறக்கும், உயிரும் சிறக்கும்".