Weight loss mistakes : வெயிட் குறைக்க போறீங்களா? இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க...  ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகரின்  டிப்ஸ் 


இன்று பலரும் உடல் எடையை குறைப்பதற்காக ஜிம் செல்கிறார்கள், உடற்பயிற்சி செய்கிறார்கள், நடைப்பயிற்சி செய்கிறார்கள், டயட் இருக்கிறார்கள் என பல விதத்திலும் தங்களை வருத்தி கொண்டு பல வகைகளிலும் ட்ரை செய்கிறார்கள். இருப்பினும் இவை அனைத்தும் செய்தும் உடல் எடையை பலரால் குறைக்கவே முடிவதில்லை. இதற்கு பல கரணங்கள் இருந்தாலும் முதலும் முக்கியமான காரணம் அவர்கள் செய்யும் சில தவறுகள் தான். இதனால் அவர்களின் இலக்கு உடல் எடை குறைப்பு என்பது அவர்களுக்கு உதவுவதற்கு பதிலாக தீங்காக அமைகிறது. அப்படி செய்யும் சில தவறுகள் பற்றி பிரபல ஊட்டச்சத்து நிபுணரான ருஜுதா திவேகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


உடல் எடை குறைப்பு பற்றி மட்டும் சிந்திக்காதீர்:


உடல் எடையை மட்டும் குறைதல் போதும் என்ற எண்ணம் இல்லாமல் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும். அவர்களின் இடுப்பு மற்றும் இடையின் மீது கவனம் செலுத்த வேண்டும். இடுப்பை விட 10 இன்ச் குறைவாக இடை இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். 


கடந்த காலத்துடன் ஒப்பிடாதீர்: 


கடந்த கால அனுபவத்துடன் அல்லது மற்றவர்களின் அனுபவங்களுடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். உங்களின் செயல்முறையை முழுமையாக அனுபவித்து உங்களின் உடல் எடை குறைப்பை ஆரோக்கியமாக எதிர்கொள்ளுங்கள்.


குற்ற உணர்ச்சி கொள்ளாதீர்கள்:


உணவு கட்டுபாட்டில் சுய ஒழுக்கம் இல்லாத போது எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காத போது உங்களை நீங்களே குற்றம் சாட்டி கொள்வதில் எந்த ஒரு பயனும் இல்லை. 


 



அவசரப்படாதீர்கள்:


உணவுமுறையில் மாற்றம், உடற்பயிற்சி செய்தல் போன்று புதிதாக எதை செய்தாலும் அதை எடுத்து கொள்ள உடல் குறைந்தது 12 வாரங்கள் எடுத்து கொள்ளும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒரே இரவில் உங்கள் எடை கூடி விடவில்லை அதே போல் ஒரே நாளில் எடை குறையவும் வாய்ப்பில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே அவசரப்படாமல் உங்களின் முயற்சியை பொறுமையுடன் கடைபிடிக்கவேண்டும்.   


உடற்பயிற்சியை தண்டனையாக பயன்படுத்தாதீர்: 


சுறுசுறுப்பாக இருப்பது நல்லது ஆனால் அது எல்லையை மீறிவிட கூடாது. தினமும் சுமார் 20-30 நிமிடங்கள் முறையான பயிற்சி செய்தாலே போதுமானது. அதை ஒரு தண்டனையை போல பயன்படுத்தாதீர். அதனால் உங்களுக்கு காயங்கள் அல்லது தீங்குகளை தான் ஏற்படுத்தும். 


தூக்கத்தின் முக்கியத்துவம் :


உடல் எடையை குறைக்கும் பயணத்தில் சிலர் தூக்கத்தின் முக்கியத்துவத்தை மறந்து விடுகிறார்கள். உங்கள் உடலில் ஒரு இன்ச் எடை குறைய வேண்டும் என்றாலும் தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்காவிடில் அது நடைபெறாது. 


சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களைப் பின்பற்றாதீர்கள்:


அவர்களை பின்பற்றுவதற்கு பதிலாக பாரம்பரியமாக நமது வழக்கத்தில் உள்ள ஆரோக்கிய குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் பயனடையலாம். 


உணவுமுறையில் கவனம் : 


நமது மனம் எப்பொழுதுமே நல்லதை விடவும் ஆரோக்கியமற்ற உணவு பொருட்களுக்கு தான் ஏங்க வைக்கும். அதனால் அதை தவிர்க்க வேண்டும். மேலும் எப்போதுமே உணவை மெதுவாக உண்ணுங்கள், உட்கார்ந்து பொறுமையாக சாப்பிடுங்கள், உணவுகளை கவனத்தில் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். 


மற்றவரின் ஒப்புதலுக்காக காத்திருக்க தேவையில்லை:


உங்களுக்கு ஏற்படும் வழக்கமான மாதவிடாய், ஆரோக்கியமான முடி, பளபளப்பான சருமம் போன்ற பல மாற்றங்கள் உங்களுக்குள் ஏற்படுவது வேறு யாருடைய கவனத்தையும் பெறவில்லை என்பது போல் உங்கள் உடல் எடை குறைப்பில் ஏற்படும் மாற்றம் பற்றிய  ஒப்புதலுக்காக காத்திருக்க தேவையில்லை.