குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிரியாணி என்றால் பிடிக்கும். பிரியாணியில் மட்டன், சிக்கன் என பல வகைகள் உள்ளன. ஆனால் கடல் உணவு வகைகளான, நண்டு, மீன், இறால், ஆகியவற்றில் செய்யப்படும் பிரியாணி சற்று பிரம்மிப்பாக பார்க்கப்படுகின்றது. தற்போது நாம் செட்டிநாடு இறால் பிரியாணி எப்படி செய்வதென்று தான் பார்க்க போறோம். 


தேவையான பொருட்கள் 


பாசுமதி அரிசி - 2 கப், இறால் - அரை கிலோ, பெரிய சைஸ் வெங்காயம் - 2, தக்காளி - 1 பெரிய சைஸ்,  பிரியாணி இலை - 1,  எண்ணெய் - தேவையான அளவு,  மராத்தி மொக்கு - 1,   லவங்கம் - 3, சோம்பு தூள் - ஒரு டேபிள் ஸ்பூன், கொத்தமல்லித் தழை, புதினா தலா ஒரு கைப்பிடி.


கறிமசாலா தூள் - ஒரு தேக்கரண்டி,  இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்,  பட்டை - சிறிய துண்டு,  தயிர் - ஒரு டேபிள் ஸ்பூன், மிளகாய் தூள் - அரை டேபிள் ஸ்பூன்,  பச்சை மிளகாய் - 3 , மஞ்சள் தூள் - அரை டேபிள் ஸ்பூன்,  பிரியாணி மசாலா - அரை டேபிள் ஸ்பூன்,  ஏலக்காய் - 3,அன்னாசிப்பூ - பாதி. 


செய்முறை


இறாலை சுத்தம் செய்து அதில், மஞ்சள் தூள், உப்பு, சிறிது மிளகாய் தூள், தயிர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும்.  வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். 


அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் விட்டு, எண்ணெய் சூடானதும் பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, சோம்பு தூள், லவங்கம், மராத்தி மொக்கு, பிரியாணி இலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.

இப்போது பிரியாணி மசாலா சேர்த்து வதக்கிய பின், தக்காளி, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்க வேண்டும்.  தக்காளி நன்கு குழைந்ததும், இறாலைச் சேர்த்து ஒரு முறை நன்கு கிளறி விட வேண்டும்.  பின்னர்  2 கப் அரிசிக்கு  3 1/4  கப் தண்ணீர்  விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். 

நன்றாக கொதி வந்ததும் அரிசியை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விட வேண்டும். பின் மூடி போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விட வேண்டும்.  முக்கால் பதம் வெந்ததும் தம் போட வேண்டும்.  அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு இறால் பிரியாணி ரெடி.


மேலும் படிக்க


Karnataka Strike: “தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக்கூடாது” - பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம்.. 144 தடை உத்தரவு


ADMK Breaks Alliance: கூட்டணி முறிவு: அண்ணாமலை படத்திற்கு அல்வா ஊட்டிய திண்டிவனம் அதிமுகவினர்...