லியோ படத்துக்காக உடலை மெருக்கேற்றி சிக்ஸ் பேக் வைத்துள்ள அசத்தலான் ஃபோட்டோ ஒன்றை நடன அமைப்பாளர் சாண்டி பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல கொரியோகிராஃபர்களுள் ஒருவராக வலம் வருபவர் சாண்டி. சென்னையை பூர்விகமாகக் கொண்ட சாண்டி மாஸ்டரின் உண்மையான பெயர் சந்தோஷ் குமார்.
கலைஞர் டிவி நடன நிகழ்ச்சிகளில் கொரியோகிராஃபராக அறிமுகமாகி பின் படிப்படியாக சினிமா துறையில் காலடி எடுத்து வைத்து வளர்ந்த சாண்டி, ரஜினிகாந்த் - பா.ரஞ்சித் இணைந்து பணியாற்றிய காலா படத்தில் பணிபுரிந்து கவனமீர்த்தார்.
அதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் நடனம் தாண்டி அனைத்து தரப்பு ரசிகர்களின் ஓட்டுக்களையும் பெற்று பிரபலமானார்.
தற்போது நடிகர் விஜய் - லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக இணையும் லியோ படத்தின் மூலம் சாண்டி நடிகராக அறிமுகமாகும் நிலையில், இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
முன்னதாக நடிகர் அர்ஜூனின் ஹெரால்டு தாஸ் அறிமுக ப்ரோமோவில், சாண்டியின் கையை அர்ஜூன் வெட்டும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் சாண்டியின் கதாபாத்திரம் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்தன.
இந்நிலையில், லியோ படத்துக்காக சிக்ஸ் பேக் வைத்து உடலை மெருகேற்றியிருக்கும் அசத்தலான புகைப்படத்தை சாண்டி தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார். மேலும் “லோகேஷ் மேஜிக்கை எதிர்நோக்கி அமைதியாக காத்திருங்கள்” எனும் கேப்ஷனையும் பகிர்ந்துள்ளார்.
சாண்டி ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் லியோ படத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் இந்த ஃபோட்டோ ரசிகர்களை வாயைப் பிளக்கவைத்தும் ஃபயர் விட வைத்தும் சமூக வலைதளங்களில் லைக்ஸ் அள்ளி வருகிறது.