தீபாவளி வந்தாலே செலவு. செலவு என்றாலே பயம். பண்டிகை எந்த அளவிற்கு சந்தோஷமானதோ.... அதே அளவிற்கு நடுத்தர வர்த்தகத்திற்கு அது பயத்தையும் தரும் என்பது தான் உண்மை. காரணம், பண்டிகை காலத்தில் வரும் செலவும், பட்ஜெட்டில் ஏற்படும் கீறலும் தான். ஆனாலும் அதையெல்லாம் சமாளித்து தான் ஒவ்வொரு பண்டிகையும் மகிழ்ச்சியோடு கடக்கிறது. 


அவ்வாறு சிரமப்படுவோருக்காக அறிமுகப்படுத்தப்பட்டது தான் பண்டு சிஸ்டம். குறிப்பாக தீபாவளிக்கு பண்டு போடுவது தான் பல குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான தீபாவளிக்கு வழி காட்டுகிறது. கிட்டத்தட்ட 40, 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பண்டு சிஸ்டர் நடைமுறையில் உள்ளது. இதற்கு பெரு முதலாளிகள் ஒன்றும் உரிமை கொண்டாட மாட்டார்கள். அந்தந்த தெருக்களில் உள்ள நமக்கு பரிட்சையமான நபர்கள் தான் ஒவ்வொரு ஆண்டும் பண்டு பிடிப்பார்கள். பண்டு பொருட்களை பொருத்து அதன் தொகை நிர்ணயிக்கப்படும். குறைந்தபட்சம் 200 ரூபாயில் இருந்து ரூ.1000 ரூபாய் வரை பண்டு தொகை பிடித்தம் செய்யப்படும். 




12 மாதங்கள் பிடித்தம் செய்யப்படும் இந்த தொகைக்கு வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகை பொருட்கள், இனிப்புகள், கார வகைகள், பட்டாசு ஆகியவை வழங்கப்படும். சிலர் பாத்திரங்கள், ஆடைகள் என சேர்த்து வழங்கி வாடிக்கையாளர்களை தக்க வைப்பார்கள். இப்படி தான் இருந்து வந்தது பண்டு சிஸ்டம். ஒரு முறை பண்ட் மூலம் கிடைக்கும் பொருட்கள், தீபாவளியை கடந்து அடுத்த 2 மாதங்களுக்கு வீட்டு மளிகையை சரிகட்டும் என்பது தான் அதின் சிறப்பே.


இப்படி இருந்த பண்டு... ஒரு கட்டத்தில் மது வகைகளுக்கு என தனி பண்டு போடும் அளவிற்கு பரிணாம வளர்ச்சி கண்டது. தீபாவளி என்றால் பட்டாசு, இனிப்புகள், புத்தாடை மாதிரி, மதுபானமும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. தீபாவளிக்கு மது பானங்களுக்கு குறிப்பிட்ட தொகையை பலரும் செலவு செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு விற்பனையாகும் டாஸ்மாக் மதுபான விற்பனையே அதற்கு சாட்சி.


அதற்கு இருக்கும் கெடுபிடியை சாதகமாக்கி தான் மதுவகைகளுக்கான தீபாவளி பண்டு பல பகுதிகளில் மறைமுக போடப்பட்டது. அனைத்து வகை மதுபானங்கள், அசைவ, சைவ ஸ்நாக்ஸ் என அனைத்தும் அந்த பேக்கேஜில் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் அது தொடர்பான அறிவிப்பு  சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பாக, கேலியாகவும் பேசப்படும். அந்த வகையில் இந்த முறை சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரது தீபாவளி பண்டு இணையத்தில் பலரை தள்ளாட வைக்கிறது. 


வள்ளி, தெய்வானையோடு மயிலில் முருகன் பறந்து அருள்பாலிக்கும் போட்டோவோடு வெளியாகியுள்ள அந்த பண்டு விபர அட்டையை படித்தால் போதை ஆகும். அந்த அளவிற்கு ஐட்டங்கள் ஏராளம், தாராளம். 10 மாதம், மாதம் ரூ.200. இதுதான் அந்த பண்டு பெறுவதற்கான தொகை. அதாவது நீங்கள் செலுத்தும் தொகை ரூ.2 ஆயிரம் தான். ஆனால் அதற்கு அவர்கள் தரும் பொருட்களை கேட்டால்.... நீங்களே படித்துப் பாருங்கள்!




1.ஃபுல் பிராந்தி- 1


2.பீர் -3


3.ஒயின்- ஆஃப்


4.ஓட்கா- குவாட்டர்


5.விஸ்கி- குவாட்டர்


6.ரம்- குவாட்டம்


7.ரம்- குவாட்டர்


8. வாட்டர் பாட்டில்- 4


9.கோல் அல்லது பெப்சி -2 லிட்டர்


10.சோடா -3


11. உருளை சால்ட் சிப்ஸ் -1பாக்கெட்


12. உருளை காரம் சிப்ஸ்- 1 பாக்கெட்


13. ஸ்வீட் - அரை கிலோ


14.ஊறுகாய் -கால் கிலோ


15. சிக்கன் 65 - அரை கிலோ


 


தீபாவளி நெருங்க நெருங்க... இது மாதிரியான ஆஃபர்களை பார்க்கும் இணைய வாசிகளுக்கு ‛எங்க ஊரில் இப்படி ஒரு ஆஃபர் இல்லையே...’ என்கிற ஏக்கமும் ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு தரப்பு, ‛இதெல்லாம் எங்கே போய் முடியுமோ...’ என கடுப்பாகவும் செய்கிறார்கள். எது எப்படியோ தீபாவளி தித்திக்கிதோ இல்லையோ... இந்த மாதிரி பண்டு வாங்கினால் கண்டிப்பாக ‛கிக்’ ஏத்தும்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண