மஹாரஷ்டிர மாநிலத்தில் ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவுறுத்தல் நடைமுறைகளை வெளியிடுள்ளது. 


மஹாராஷ்டிரா மாநிலம், புனேவின் எரண்ட்வானே பகுதியைச் சேர்ந்த 46 வயதுள்ள மருத்துவருக்கு சமீபத்தில் காய்ச்சல் ஏற்பட்டது. அவரது உடலில் தடிப்புகள் இருந்தன. அவர் மருத்துவரை அணுகியபோது, அவரது ரத்த மாதிரி ஆய்வுக்காக புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. டெங்கு மற்றும் சிக்குன் குனியா போன்ற தொற்றுநோய்களை பரப்பும், ஏடிஸ் வகை கொசு வாயிலாகவே இந்த ஜிகா வைரஸ் பரவுகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 


அடுத்து ஜூலை 1-ம் தேதி இரண்டு கர்ப்பமான பெண்கள் உள்பட ஆறு பேருக்கு ஜிகா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் இருவர் முந்தேவா பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்த வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்ட மருத்துவரின் மகளுக்கும் ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.


இது ஏடிஸ் கொசுவின் மூலம் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இந்த பாதிப்பு  உறுதி செய்யப்பட்டால் அவர்களின் குழந்தைகளுக்கு தலை சிறியதாக இருக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.


இதுவரை ஏழு பேருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஜிகா வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஏ.டி.எஸ் கொசுவால் ஜிகா வைரஸ் பரவுவதால் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் மருத்துவமனைகள் அனைத்தையும் கண்காணித்து போதிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.


உலக சுகாதார நிறுவனத்தின் படி, ஜிகா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாக தோலில் தடிப்புகள், காய்ச்சல், மூட்டு வலி, தலைவலி ஆகியவை நீண்ட காலத்திற்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • காய்ச்சல்-102°F (38.9°C) காய்ச்சல் இருக்கும்.

  • தடிப்பு -உடலில் சிகப்பு நிற தடிப்புகள் ஏற்படும். அதோடு, முகம் மற்றும் உடலில் மற்ற பகுதிகளிலும் பரவும். அரிப்புடன் கூடிய தடிப்புகளாக இருக்கும். 

  • விரல்கல், கை, கால் மூட்டுப் பகுதிகளில் வீக்கம், வலி ஏற்படும். 

  • கண்களின் நிறம் சிகப்பு அல்லது பிங்க் நிறமாக மாறும்.

  • வைரஸ் தொற்று ஏற்படுவதால் இருக்கும் தசை வலி உண்டாகும். 

  • உடல்சோர்வு, வயிறு வலி, வாந்தி அல்லது கண்களில் வலி இருக்கும். 


தடுப்பது எப்படி?


 பகலில் கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்ளவும். வீடு, அலுவலகம் என சுற்றியுள்ள பகுதியில் கொசு உற்பத்தியாகும் வாய்ப்புகளை தவிர்க்க வேண்டும். தண்ணீர் தேங்கவிடுவது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும்.