ஒட்டகப் பால் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவில் வருவது வெற்றிக் கொடி கட்டு படத்தில் வடிவேல் காமெடிதான். அதனை மையமாகக் கொண்டு சேலம் மாவட்டம் கோரிமேடு பகுதியில் குருவம்பட்டி வன உயிரியல் பூங்கா செல்லும் வழியில் உள்ள டீக்கடை ட்ரெண்டாகி வருகிறது. ஹோட்டல் மேனேஜ்மெண்ட் முடித்த இரண்டு நண்பர்கள் சேர்ந்து ஒட்டகப் பாலில் டீ, காபி மற்றும் மில்க் ஷேக் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். ராஜஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒட்டகப் பால் 48 மணி நேரத்தில் சேலம் வந்தடைகிறது. ஒட்டகப் பால் 192 மணி நேரம் வைத்துப் பயன்படுத்தலாம், அதாவது 8 நாட்கள் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். உடலுக்கு ஆரோக்கியமான நன்மைகளை கொண்ட தாய்ப்பாலுக்கு இணையான ஒட்டகப் பாலின் விலை 1 லிட்டர் ரூ. 900க்கு விற்பனை செய்து வருகின்றனர். டீ ஒன்று ரூ.60க்கு விற்கப்படுகிறது.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் அருண் கூறுகையில், உடலுக்கு பலம் சேர்க்கும் ஒட்டகப் பாலில் ஊட்டச் சத்தை அதிகரிக்கும் விட்டமின்ஸ், மினரல்ஸ், சிங்க் போன்ற பல சத்துக்கள் அடங்கி உள்ளதால் தினசரி ஒட்டகப் பால் அருந்துபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கொரோனா போன்ற நோய்களிலிருந்து எளிதாக நம்மை காத்துக்கொள்ள ஒரு அற்புத மருந்தாக ஒட்டகப் பால் இருக்கும் என்று கூறினார்.
மற்றொரு உரிமையாளரான பிரபாகரன் கூறுகையில், ஒட்டகப் பாலில் இன்சுலின் அளவு மிக அதிகமாக உள்ளதால் ஆரம்ப நிலை சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. ஊட்டச்சத்து அதிகம் உள்ளது குழந்தைகளுக்கு பல நன்மைகளை தருகிறது. புற்றுநோய் உள்ளவர்கள் தினசரி ஒட்டக பால் எடுத்துக் கொண்டால் புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கக்கூடிய மருந்தாக அமையும். மேலும், கெட்ட கொழுப்புகளை கரைப்பதால் நம் உடலில் ஏற்படும் இரத்த சுழற்சியை அதிகரிக்கும். இதனால் இருதயம் சீரான முறையில் செயல்படும். ஆட்டிஸம் டிஸ்ஆர்டர் என்று சொல்லக்கூடிய நோய்க்கு மருந்தாக அமைகிறது என்று கூறினார்.
மேலும், தயிர், வெண்ணை, நெய், பன்னீர் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற பொருட்களை ஒட்டகப் பாலில் இருந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விலை அதிகமாக இருந்தாலும் ஒட்டகப் பாலின் நன்மை அறிந்தவர்கள் தங்களது கடையைத் தேடி வருகிறார்கள். தங்களிடம் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஒட்டகப் பால் கேட்பவர்களுக்கு பாலாகவும் விற்பனை செய்து வருகின்றனர். இதுபோன்று உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய உணவுகளை அனைவரும் உட்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வோம்.