மதுரையை சேர்ந்த குருநாதன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.அதில், "மதுரை மாவட்டம், சேடபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாப்டூர் கிராமத்தில் 90 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்ததது. பின்னர் சில ஆண்டுகளுக்கு முனு இந்த மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் குறைக்கப்பட்டது. சாப்டூர் கிராமத்தை சுற்றி20 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 40,000 பேர் உள்ளனர். ஆனால், இந்த மக்கள் தொகைக்கு ஏற்ப ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர், மருந்து, மாத்திரை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதநால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் 24 மணிநேரமும் பிரசவம் பார்ப்பதற்கான மருத்துவரோ, செவிலியரோ, 108 ஆம்புலன்ஸ் வசதியோ இல்லை. மகப்பேறு காலத்தில் பெண்கள் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உசிலம்பட்டிக்கு செல்ல வேண்டியுள்ளது. மேலும் மலையடிவாரத்தில் உள்ள கிராமம் என்பதால் விஷக்கடிக்கான மருந்துகள் இல்லாமல் மக்கள் அனைவரும் மிகவும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
ஆகையால், சாப்டூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மீண்டும் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி 24 மணி நேரமும் தங்கி பணிபுரியக்கூடிய மருத்துவரையும், செவிலியரையும் பணியமர்த்தி, 108 ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு வழக்கு தொடர்பாக மனுதாரர் ஒரு வருடத்திற்கு முன்பே மதுரை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளார். அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என கேள்வி எழுப்பினர். மேலும் மக்கள் தொகையின் அடிப்படையில் சாப்டூர் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் குறைக்கப்பட்டதா? எனவும் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, மதுரை சுகாதாரத்துறை இணை இயக்குநர், வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.