அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. 1985-ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு, அக்டோபர்  1 முதல் 31 வரை மார்பக புற்றுநோய் மாதமாக அறிவித்தது. ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வரும் மார்பக புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்துவதற்காக இந்த ஒரு மாதம் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது.  இந்த மாதத்தில், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு, வகுப்புகள், பதாகைகள், விழிப்புணர்வு பேரணிகள், மாரத்தான் ஓட்டம், இலவச மருத்துவ ஆலோசனைகள், மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகிறது.


இந்த மார்பக புற்றுநோய் ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்திவிட முடியும். இன்றைய சூழ்நிலையில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பக பரிசோதனை செய்துகொள்வது, புற்றுநோய் வராமல் தடுப்பதற்கும், இருப்பின் குணப்படுத்துவதை விரைவுபடுத்துவதை வழிவகுக்கும்.


மார்பக புற்றுநோய் –


உயிரணுக்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியே புற்றுநோய் செல்களாக வளர்கிறது. மார்பகத்தில் சிறு கட்டிகளாக ஆரம்பித்து நாளடைவில் இது புற்றுநோயாக மாறுகிறது.




எந்த வயதில் வரும்?


50 வயதுக்கு மேற்பட்ட பெண்களை பாதித்து வந்த புற்றுநோய் இன்று 30 வயதில் இருந்து ஆரம்பித்துவிட்டது. பெண்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். உலகளவில் இந்தியாவில் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


மார்பக புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் என்ன?


உணவு பழக்க வழக்கம், வாழ்வியல் முறை அதிகளவில் மார்பக புற்றுநோய் வருவதற்கு காரணமாக இருக்கிறது. மேலும், உடல் பருமன், சிறு வயதில் மாதவிடாய் சுழற்சி தொடங்குதல், குழந்தை பேறு வயது, பிறந்த குழந்தைக்கு தாய் பால் புகட்டாமல் இருப்பது, எக்ஸ் கதிர்கள் ஊடுருவுவது, கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு, புகை பழக்கம், மது பழக்கம், மெனோபாஸ்  தாமதமாதல், போன்ற காரணங்களினால் மார்பக புற்றுநோய் வருகிறது.




மார்பக புற்றுநோய் அறிகுறிகள் - மார்பகம் மற்றும் அக்குள் பகுதியில் சிறு கட்டிகள் இருக்கும், மார்பகத்தில் வீக்கம், மார்பகத்தில் தோலின் நிறம் மாறுதல், சிவப்பு நிறமாக இருத்தல், நிப்புள் பகுதியில் வலி இருக்கும், தாய்ப்பாலுடன் இரத்தம் சேர்ந்து வெளியேறுதல், மார்பகத்தின் வடிவம் மாறி இருத்தல், மார்பகத்தில் வலி இருத்தல், இதுபோன்ற ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.




எச்சரிக்கை - உடல் உறுப்புகளை பற்றிய கவனம் செலுத்த வேண்டும். உடலில் நடக்கும் சிறு மாற்றத்தையும் கவனிக்க வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை மருத்துவமனை சென்று மார்பக பரிசோதனை செய்வது அவசியம். மேலும் மார்பகத்தை மாதம் ஒரு முறை சுயபரிசோதனை செய்து கொள்ளலாம்.


சுயபரிசோதனை மற்றும் மருத்துவ பரிந்துரைகள் பற்றி அடுத்த கட்டுரையில்..