கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல்கள், இசை என டி.ராஜேந்தர் பாணியில் முழுக்க முழுக்க `ஹிப்ஹாப் தமிழா’ ஆதியின் திரைப்படமாக, அவரது நடிப்பில் வெளிவந்திருக்கிறது `சிவகுமாரின் சபதம்’. இணை தயாரிப்பாளரும் அவரே. காஞ்சிபுரத்தின் நெசவாளர் குடும்பத்தில் பிறக்கும் சிவகுமார் தன் குடும்பத்தின் பொறுப்பையும், காஞ்சிபுரத்தின் பாரம்பரியத்தையும் ஒரே நேரத்தில் காப்பது தான் `சிவகுமாரின் சபதம்’.


மிடில் கிளாஸ் இளைஞன், காதல் என்ற பெயரில் stalking செய்து அதில் தோல்வி, தாத்தா செண்டிமெண்ட், பணக்கார வில்லன், யூடியூப் பிரபலத்தைக் காமெடியன் வேடத்தில் உடன் நடிக்க வைப்பது, பாரம்பரியமான தொழிலைச் சிறந்ததாக முன்வைத்தல் என டெம்பிளேட் திரைப்படமாக வெளிவந்துள்ளது ஆதியின் இந்தப் படம். சிவகுமாரின் தாத்தா மேற்கொண்ட சபதம் ஒன்றால் பரம்பரைத் தொழிலான நெசவு தடைப்பட்டு நிற்கிறது. சிவகுமார் காதலிக்கும் பெண்ணும், சிவகுமாரின் சித்தப்பா முருகனின் மனைவியும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அந்தக் குடும்பத்தின் தலைவரான சந்திரசேகரனை எதிர்த்து தான் சிவகுமாரின் தாத்தா தறி வேலையில் ஈடுபடுவதில்லை என சபதம் எடுத்திருக்கிறார். சந்திரசேகரனுக்கு எதிராக சிவகுமாரின் சபதம் பலித்ததா, சிவகுமார், அவனின் சித்தப்பா முருகன் ஆகியோரின் காதல் வென்றதா என்பது படத்தின் மீதிக்கதை.



`ஹிப்ஹாப் தமிழா’ ஆதி படம் முழுவதும் வருகிறார். ஆனால் படத்தின் தலைப்பை `மீசைய முறுக்கு’ என்றோ, `நட்பே துணை’ என்றோ, `நான் சிரித்தால்’ என்றோ வைத்தால் ஆதியின் ஹேர்ஸ்டைலைத் தவிர எதுவும் மாறவில்லை. அதே நடிப்பு; அதே பன்ச் டையலாக். அதே stalking. அதே டைலர். அதே வாடகை. சிவகுமாரின் சித்தப்பாவாக வரும் prankster ராகுல் ஆச்சர்யமான புதுவரவு. சிவகுமாரின் காதலியாக வரும் மாதுரி சில இடங்களில் கவர்கிறார். எனினும், சிவகுமாரின் சபதம் கதைக்கு மாதுரி தேவையில்லை என்பதே உண்மை. சிவகுமாரின் தாத்தா வரதராஜன் வேடத்தில் நடித்திருக்கும் இளங்கோ குமணன் மிகச்சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். சிவகுமாரின் நண்பன் கதிராக வரும் ஆதித்யா கதிர் படத்தின் போக்கைப் பல இடங்களில் சிரிக்க வைத்துக் காப்பாற்றுகிறார். 


`மீசையை முறுக்கு’ படத்தில் இண்டிபென்டண்ட் மியூசிக், `நட்பே துணை’ படத்தில் ஹாக்கி விளையாட்டு ஆகியவற்றின் வரிசையில் `சிவகுமாரின் சபதம்’ படத்தில் நெசவு வேலையைக் கதைக்களமாக்கியுள்ளார் ஆதி. அவரின் படங்களின் கதை பெரும்பாலும் ஒரே மாதிரியானவையாக இருக்கின்றன. அரைத்த மாவையே அரைக்காமல் கதை, திரைக்கதையில் ஆதி இன்னும் கவனம் செலுத்த வேண்டும். வசனங்கள் என்ற பெயரில் வாழ்க்கைத் தத்துவங்களை ஆங்காங்கே உதிர்க்காமல், இறுதி 20 நிமிடங்களில் வரும் கதைக்குச் சென்றிருக்கலாம். இறுதி 20 நிமிடங்களில் நெசவு பற்றிய சீரியஸான கதை தொடங்கும் வரை, மெகா சீரியல் ஒன்றைப் பெரிய திரையில் பார்த்த உணர்வைத் தருகிறது திரைக்கதை. .



முதலாளித்துவ வளர்ச்சியால் பொலிவிழந்து போகும் நிலவுடைமை காலத்து எச்சங்களைப் போற்றும் பாணியில் ஆதி ஏற்கனவே ஜல்லிக்கட்டு குறித்து பாடல் எழுதியுள்ளார். தமிழ் மொழியை அரசியல் நீக்கம் செய்து, உணர்வு எழுச்சியாக மாற்றி, அதிலும் லாபம் ஈட்டியுள்ளார். அந்த வரிசையில் தற்போது காஞ்சிபுரம் நெசவுத் தொழிலாளர்களின் ஒரே மீட்பராகத் தன்னை முன்னிறுத்தி, இறுதி 20 நிமிடங்களில் `மெசேஜ்’ சொல்ல முயன்றிருக்கிறார் ஆதி. பாரம்பரிய நெசவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதும், அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்பதும் உண்மை தான் என்ற போதும், அதனைக் கதைக்குத் தேவையான கண்டெண்டாக மாற்றி, அவசியம் மெசேஜ் சொல்லத்தான் வேண்டுமா?


`ராஜ பட்டு’ என்ற பெயரில் லட்சக்கணக்கான ரூபாய் விலைக்கு விற்கப்படும் துணிகளை விட, மிகக்குறைந்த விலையில் துணியை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் பாரம்பரியத்தை விட்டு விலகியதால் கெட்டவர்கள் ஆகிவிட்டார்களா? பாரம்பரிய நெசவாளர்களுக்கு மட்டும் தான் வாழ்வாதாரத்தில் சிக்கல் இருக்கிறதா? திருப்பூரில் பின்னலாடை தொழிற்சாலைகளில் குறைந்த சம்பளத்திற்கு உழைப்பைக் கொட்டும் தொழிலாளர்கள், மாதவிடாய் நேரத்தில் பணியாற்றுவதால் வேலைத்திறன் குறையும் என்பதற்காக மாதவிடாய் நாள்களைத் தள்ளிப்போடும் மாத்திரைகள் கொடுக்கப்பட்டு, வேலை வாங்கப்படும் பெண் தொழிலாளர்கள், திருமணத்திற்குத் தவணை முறையில் நிதி தருவதாக ஒப்பந்த அடிப்படையில் குறைந்த கூலிக்கு வேலைக்கு வரும் வட இந்தியப் பெண் தொழிலாளர்கள், ஜி.எஸ்.டி வரி விதிப்பிற்குப் பின் வியாபாரத்தை முழுவதுமாக இழந்த சிறு, குறு தொழிலாளர்கள் எனப் பல தரப்பட்ட மக்களும் ஒருபக்கம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், ரெடிமேட்ஸ் - சில்க்ஸ் என்ற எதிரெதிராக அளிக்கப்படும் உதாரணம் தேவைதானா ஆதி? 



தனது பாடலான `கிளப்புல மப்புல’ பாடல் மீதான சுயவிமர்சனத்தை ஒரு காட்சியில் செய்துகொண்டே, பப்புக்குச் செல்லும் பெண்களை மீண்டும் மோசமானவர்களாகச் சித்திரித்துள்ளதோடு, `நல்ல பெண்’ என்று அவர் எழுதிய கதாபாத்திரத்தை அவரே காப்பாற்றுவது என அபத்தமான காட்சிகள் இதில் ஏராளம். `சிவகுமார் பொண்டாட்டி’ பாடல் தியேட்டரில் கொண்டாட்ட மூடைத் தருகிறது. `பாகுபலி’ பாடல் நன்றாக வந்திருக்கிறது. பிற பாடல்களும், எங்குமே சொல்லும்படி இல்லாத பின்னணி இசையும் இசையமைப்பாளர் `ஹிப்ஹாப் தமிழா’ ஆதியை மிஸ் செய்ய வைக்கிறது. 


அர்ஜுன் ராஜாவின் கேமரா குறுகலான வீடு, பெரிய வீடு, தறி எனப் பல இடங்களில் அழகான பணியைச் செய்திருக்கிறது. படத்தொகுப்பாளர் தீபக் துவாரக்நாத் படத்தின் தேவையற்ற காட்சிகளை வெட்டியிருந்தால், இதுவொரு குறும்படமாக யூடியூபில் வெளியாகியிருக்கலாம். 


`ஹிப்ஹாப் தமிழா’ ஆதி மீண்டும் `பாரம்பரியம்’, `பண்பாடு’ என்பதை விற்பனைச் சரக்காக மாற்றும் முயற்சியில் உருவாகியிருக்கிறது `சிவகுமாரின் சபதம்’. `விவசாயிகள் பாவம்’ என்று கண்ணீர் சிந்திய தமிழ் சினிமா அடுத்து `நெசவாளர்கள் பாவம்’ என்று ஆதியின் புண்ணியத்தில் கண்ணீர் சிந்தத் தொடங்கியிருக்கிறது. ஆதி அடுத்து எந்தப் `பாரம்பரியத்தின்’ மீட்பராக அடுத்த படங்களில் தோன்றுவார் என்பது மட்டும் சஸ்பென்ஸ்.