தமிழ் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கக்கூடிய பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் சாம் விஷால், மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த சிபி புவனசந்திரன், கானா பாடகி இசைவாணி ஆகியோர் கலந்துகொள்ளவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மக்களிடைய எதிர்மறைக் கருத்துக்கள் நிலவிய போதும் டெலிவிஷன் ரேட்டிங்கில் இந்நிகழ்ச்சியை அடித்துக்கொள்வதற்கு யாருமே இல்லை என்று தான் கூற வேண்டும். அந்தளவிற்கு கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பிரபலமாகிவருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்வில் முதல் சீசனிலிருந்தே காதல், சண்டை, நட்பு, பாசம் என எதற்குமே பஞ்சம் இல்லை என்றுதான் கூற வேண்டும். அதேப்போன்று தான் பிக்பாஸ் சீசன் 5 இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகளவில் எழும்பியுள்ளது. இந்த எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் வகையில் இன்னும் 3 நாள்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்தே யார் யார் சீசன் 5-இல் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பும், வதந்திகளும் அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக குக்வித் கோமாளி டைட்டில் வின்னர் கனி, நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிரியங்கா, நடிகை ஷகிலாவின் மகள் திருநங்கை மிலா, பாபா பாஸ்கர், இமான் அண்ணாச்சி, விஜே பப்பு உள்ளிட்ட பலர் கலந்துகொள்வார்கள் என்ற பெயர்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மிலா, கோபிநாத் ரவி, ஷாலு ஷாமு, கண்மணி ஆகியோரின் வெளியான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது. அவர்கள் போட்டியில் பங்கேற்பதற்காக நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் தான் மீண்டும் சிலரின் பெயர் தற்போது பெயர் உறுதியாகியுள்ளது. அதில், சூப்பர் சிங்கர் சாம் விஷால், மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த சிபி புவனசந்திரன், கானா பாடகி இசைவாணி ஆகியோர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக சூப்பர் சிங்கர் சாம் விஷாலின் குரலுக்கு பல ரசிகர்கள் உள்ள நிலையில் பிக்பாஸ் போட்டியில் எப்படியெல்லாம் அனைத்து போட்டியாளர்களையும் மற்றும் ரசிகர்களையும் தனது பாடலின் மூலம் அசத்தப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகளவில் உள்ளது. இதேபோன்று 2020-ஆம் ஆண்டில் பிபிசி 100 மகளிர் விருதுகளில் ஒருவரான பிரபல கானா பாடகி இசைவாணியும் கலந்துகொள்ளவுள்ளார். எனவே இவரின் பங்களிப்பு எப்படி இருக்கப்போகிறது? என்ற ஆர்வம் தமிழ் பார்வையாளர்களிடையே அதிகளவில் ஏற்பட்டுள்ளது.
மேலும், மாஸ்டர் படத்தில் விஜய்யின் மாணவராக நடித்தத் தமிழ் நடிகர் சிபி புவனசந்திரன் இந்நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்குபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிக்பாஸ் போட்டியில் பங்கேற்கவுள்ள அனைத்துப் போட்டியாளர்களும் கொரோனா விதிமுறையின் படி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் பிக்பாஸின் தொடக்க நிகழ்ச்சி அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கவுள்ளதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ஆனாலும் தற்போது ஐபிஎல், சர்வைவர் போன்றவை ஒளிபரப்பாகிவரும் நிலையில் இந்த சீசனுக்கு எந்தளவிற்கு ரேடிங் இருக்கும் என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.