உலகம் முழுக்கவே அறுவடை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் அறுவடை திருவிழாவாக பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. வேளாண்மையே இந்நாட்டின் முதன்மையான தொழில் என்பதால் அறுவடை காலத்தையும், விவசாயத்திற்கு ஆதாரமாக இருக்கும் சூரியனை போற்றி நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய நாள், போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சுத்தம், சுகாதாரத்தை பேணும் விதமாக போகி கொண்டாடப்பட்டு வருகிறது. ‘புதியன புகுதல்’ என்று சொல்லப்படுவதை கேட்டிருப்போம். புதுமைக்கான தொடக்கமும் அறுவடை கொண்டாட்டமும் என்னென்ன செய்யலாம், செய்யக்கூடாதவை என்னென்ன என்பது குறித்து காணலாம்.
தீயவை போக்கும் போகி
போகிப் பண்டிகை ஆண்டுதோறும் ஆங்கில மாதமான ஜனவரியில் கொண்டாடப்படுகிறது. தைப் பொங்கல் நாளுக்கு முந்தைய நாள். தமிழ்நாடு மட்டுமல்ல ஆந்திர, தெலங்கானா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களிலும் கூட அறுவடை திருநாள், போகிப் பண்டிகை வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. மகர சங்கராந்தி பண்டிகையின் முதல் நாளாகவும் இந்த நாள் உள்ளது. போகி ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று தொடங்கி காணும் பொங்கல் திருநாள் வரை இது கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டங்கள் போகி திருவிழா, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் ஆகியவற்றுடன் தொடங்கி காணும் பொங்கலுடன் முடிவடையும். போகி நாளின் முக்கியத்துவம் மற்றும் அதன் வரலாறு பற்றி தகவல்களை காணலாம்.
புராணங்களின் படி, மழை, சூரியக் கடவுளை கொண்டாடும் விதமாக போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வேளாண்மை செழிக்க விவசயிகள் இறைவனிடம் வேண்டும் வழிபாடு. கலப்பை, உழுமாடு பிற விவசாய உபகரணங்களையும் வணங்குவார்கள். ஆண்டு முழுக்க வீட்டில் இருக்கும் பழைய பொருட்கள், மாடுகளுக்கு வாங்கிய வைக்கோல் மற்றும் பயனற்ற வீட்டுப் பொருட்களை தீயிலிட்டு எரிக்கிறார்கள். போகியன்று வீட்டை சுத்தம் செய்வார்கள். பொங்கல் திருவிழாவுக்கு தயாராகும்விதமாக வீட்டுக்கு வெள்ளையடிக்கும் பழக்கமும் இருந்தது. ஆண்டிற்கு ஒருமுறை வெள்ளை அடிப்பார்கள். போகியன்று தீயிட்டு எரிக்கும் பொருட்களுடன் எதிர்மறையான எண்ணங்களை தீயுடன் சேர்த்துவிடலாம். போகி நாளில் புத்தாடை அணிந்து கொண்டாடுவர்.
போகி அன்று வீட்டை சுத்தம் செய்து அலங்கரிக்கின்றனர். சாமந்தி பூக்களால் ஆன மாலைகள், மாவிலைகள், வேப்பிலை ஆகியவற்றை கொண்டு வீட்டை அலங்கரிக்கின்றனர். தென்னிந்திய மாநிலங்களில் போகிப் பண்டிகை ‘ பெத்த பாண்டுகா' என்றும் அழைக்கப்படுகிறது. வீட்டில் முன் கோலமிடுவது, பூக்களால் அலங்கரித்து கொண்டாடி மகிழ்வர்.
என்னென்ன செய்யலாம்? செய்ய கூடாதவை..
- போகிப் பண்டிகையன்று தெய்வங்களை வழிபடும் வழக்கம் உள்ளது. அன்றைக்கு வீடுகளில் விளக்கேற்றி வழிபடலாம்.
- மழைக்காலம் முடிந்து குளிர்காலம் என்பதால் நோய்க்கிருமிகள் பரவும் ஆபத்து அதிகமிருக்கும் காலம் என்பதால் நோய்த்தொற்று பரவலில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வீட்டை சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும்.
- போகி அன்று போளி, பாயசம் உள்ளிட்ட சமையல் செய்து இறைவனை வழிபடலாம்.
- போகி அன்று மதியத்திற்கு சுத்தம் செய்து முடித்துவிட வேண்டும். முந்தைய நாளில் சுத்தம் செய்யும் பணிகளை தொடங்கிவிடலாம். அப்போதுதான் மறுநாள் போகி பண்டிகை கொண்டாட முடியும்.
- தீய எண்ணங்கள், பழக்கங்களை கைவிட முயற்சி செய்யுங்கள்.
- நன்மைகளே சூழட்டும்.