Actor Tarun Kumar: 90களில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்த தெலுங்கு நடிகர் தருண் குமார் இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

 

சினிமாவை பொறுத்தவரை ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தவர்கள் சிலர் மட்டுமே. அப்படி ஓரிரு படங்களில் மட்டும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் தெலுங்கு நடிகர் தருண் குமார். 1981ம் ஆண்டு இதே நாளில் தெலங்கானா மாநிலத்தில் பிறந்தவர் தருண் குமார். இவருடைய அப்பா சக்ரபாணி ஒரியா மொழியில் நடிகராக நடித்தவர். அம்மா ராஜா ரமணி தெலுங்கு மொழியில் நடிகையாக வலம் வந்தவர். 

குழந்தை நட்சத்திரமாக தேசிய விருது


இப்படி திரைத்துறை பின்னணியை கொண்ட தருண் குமார் 11வது வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கினார். மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த தருண்குமார் அப்படத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்தார். தனது 10 வயதிலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதைப் பெற்றார்.



தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளிவந்த தளபதி படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தமிழில் மட்டும் இல்லாமல் மலையாள திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.

 

புன்னகை தேசம் ஹீரோ


பின்னர், 2000ம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான நுவ்வு காவாலி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஒருசில தெலுங்கு படங்களில் நடித்த இவர், தமிழில் முதன்முதலில் 2002ம் ஆண்டு ஆர்பி சௌத்ரி நடிப்பில் வெளிவந்த புன்னகை தேசம் படத்தில் அறிமுகமானார். அதில் சினேகா, குணால், ஹம்சவர்தர், தாமு, பிரீதா விஜயகுமார் என பலர் நடித்தனர். நட்பின் ஆழத்தை கூறும் இந்த படத்தில் முக்கிய லீட் ரோலில் தருண் குமார் நடித்துள்ளார். 

 

தொடர்ந்து ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தில் நடித்த இவர், மீண்டும் சினேகாவுடன் இணைந்து காதல் சுகமானது உள்ளிட்ட படங்களில் நடித்தார். மூன்றே படங்களில் நடித்து இருந்தாலும் தமிழ் ரசிகர்களிடையே சாக்லேட் பாயாக பிரபலமானார். தெலுங்கிலும் சில படங்களில் ஹீரோவாக நடித்த தருண் குமாருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏற்பட்டது. 



 

விரைவில் கம்பேக்!


பின்னர், திடீரென தருண்குமார் நடித்த சில படங்கள் தோல்வியடைந்ததால் திரையுலகை விட்டு விலகினார். தமிழில் நடிப்பதை தருண்குமார் நிறுத்திக் கொண்டார். இதனால், தமிழ் ரசிகர்களின் நினைவில் இருந்தும் தருண் குமார் மறைந்தார். இந்த நிலையில் நடிகர் தருண் குமார் இன்று தனது 43வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைத்துறை நண்பர்களும், ரசிகர்களும் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். 

 

நீண்ட நாட்கள் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த தருண் குமார் வெப் சீரிஸ் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்பட்டது. இதை தருண் குமாரின் தாயான ராஜா மணி உறுதி செய்திருந்தார். தெலுங்கில் உருவாகி வரும் வெப் சீரிஸில் தருண் குமார் நடித்து வருவதாகவும், மற்றொரு படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.