பூக்கள் எப்போதும் நமக்கு புத்துணர்ச்சி, நம்பிக்கை தரக்கூடியவை. எத்தனை சோர்வாக இருந்தாலும் ஒரு பூச்செடியைப் பார்க்கும்போது புது நம்பிக்கை பிறக்காமல் போவதில்லை. பூ கவிதையின் ஆதாரம். பூ காதலின் அடையாளம். பூ இறுதி அஞ்சலிக்கும் அன்பு சாட்சி. இப்படி பூக்கள் நம் வாழ்வில் எல்லாத் தருணங்களிலும் இருப்பதால் நம்மைச் சுற்றி எப்போதும் நேர்மறை எண்ணங்கள் மனம் வீச பூச்செடிகளை வளர்ப்போம்.
ஸ்நேக் ப்ளான்ட்:
இது மிகக்குறைந்த பராமரிப்பு மட்டுமே தேவைப்படும் ஒரு செடி. இது இரவிலும் கார்பன் டை ஆக்ஸைடை ஆக்சிஜனாக மாற்றித்தரும் எனக் கூறப்படுகிறது. சுற்றுப்புறத்தில் உள்ள காற்றின் நச்சுக்களை அகற்றும். இது நாசாவின் உயர் தர காற்று சுத்திகரிப்பு செடிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
பீஸ் லில்லி
பீஸ் லில்லி செடியும் காற்றை சுத்திகரிக்கக் கூடியது. அறையில் ஈரப்பதத்தை தக்கவைக்கும். ஆனால் இந்தச் செடி விஷத்தன்மை கொண்டது. அதனால் குழந்தைகள் இருந்தால் கவனம் தேவை.
ஆஃப்ரிக்கன் வயலட்
ஆஃப்ரிக்கன் வயலட் என்ற உள் அலங்கார செடி அதன் பூக்களுக்காகவே பிரபலம். இவை இளஞ்சிவப்பு, ஊதா, நீலம், வெள்ளை என பல நிறங்களில் பூக்களைக் கொண்டிருக்கும். நன்றாக பராமரித்தால் வருடம் முழுவதும் பூக்களைத் தரும். இந்த வகை பூக்களுக்கு நல்ல நேரடியாக வெயில் கிடைத்தால் தண்ணீரை வெளியில் தள்ளும் மணல் கிடைத்தால் போதும் நன்றாக வளரும்.
கிறிஸ்துமஸ் கேக்டஸ்
கிறிஸ்துமஸ் கேக்டஸ் என்பது சப்பாத்திக்கல்லி வகையைச் சேர்ந்தது. இது ஆண்டு முழுவதும் அழகான பூக்களைத் தரக்கூடியது. இளஞ்சிவப்பு, ஊதா, நீலம், வெள்ளை பூக்களை தரும். இதை நேரடியாக சூரிய ஒளி படும்படி வைக்கக்கூடாது. இதை சற்று குளிர்ந்த சூழலிலேயே வளர்க்கலாம். தண்ணீரும் அதிகம் வார்க்கக் கூடாது.
லாவண்டர்
லாவண்டர் செடிகள் பொதுவாக எண்ணெய் தயாரிக்க பயன்படுகின்றன. லாவண்டர் ஆயில் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். மன அழுத்தத்தைக் குறைக்கும். மனதிற்கு அமைதி நல்கும். நன்றாக தூக்கம் தரும்,
ஃபிலிப்பைன் எவர்கிரீன்
ஃபிலிப்பைன் எவர்கிரீன் செடியை சைனீஸ் எவர்கிரீன் என்றும் கூறுகின்றனர். இதனை வீட்டினுள் வளர்ப்பது எளிது. இதற்கு நிறைய சூரியஒளி தேவையில்லை.
இங்கிலிஷ் ஐவி
இது தோட்டச் செடிகளில் மிகவும் முக்கியமானது. இது காற்றில் உள்ள பென்சீன், ஸைலீன், ஃபார்மால்டிஹைட் ஆகியனவற்றை கலையும் என்று கூறப்படுகிறது. அதனால் இதனை படுக்கையறையில் வைப்பது உகந்ததாகும். இது பல ஒவ்வாமைகளில் இருந்து விடுவிக்கும்.
வீட்டினுள் விதவிதமாக செடிகளை அதுவும் பூச்செடிகளை வளர்த்தால் காலை கண் விழிக்கும்போது பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே…
பார்த்ததாரும் இல்லையே… என்று பாடிக் கொள்ளலாம் அல்லவா?