நீங்கள் இன்ஸ்டாகிராம் அதிகம் உபயோகிப்பவர்கள் என்றால் அதில் அண்மைக்காலமாக இயற்கை முறையிலான கூந்தலுக்கான ஹேர்கேர் பொருட்கள் விளம்பரம் வருவதை கவனித்திருப்பீர்கள். தலைமுடிக்கான ஷாம்பூவை நீங்களே உருவாக்கலாம் என்பது முதல் ஷாம்பூவுக்கு உங்களது பெயரே வைத்துத் தருவோம் என்பது வரை விதம் விதமான விளம்பரங்கள் இருந்தாலும் அவற்றில் எந்த ஷாம்பூவை வாங்குவது என குழப்பம் ஏற்படும்.
இது போன்ற சிக்கல்கள் ஏற்படும் நிலையில் உங்கள் தலைமுடி என்ன வகை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்,அதற்கு ஒரு நிபுணரை அணுகுவது பரிந்துரைக்கப்படுகிறது. இதுகுறித்து ஒரு ஃபார்முலாவை அண்மையில் சரும நிபுணர் நிகிதா சோனாவானே உருவாக்கியுள்ளார். அவர் கூறுகையில், பெரும்பாலான தலைமுடி டைப் 2பி எனப்படும் வேவி ஹேர் வகையைச் சேர்ந்தவை என்பதால் அதற்கான ஒரு ஃபார்முலாவை உருவாக்கியுள்ளேன்’ என்று கூறியுள்ளார்.
இந்த வகை முடி உள்ளவர்களுக்கு முடி உடைதல் சர்வசாதாரணமாக நிகழும் பிரச்னை. இது தவிர கூந்தல் நுணியில் வளைந்து கொள்ளும். இதுபோன்ற முடிக்கு ஹைட்ரேட் மாஸ்க் வகைகளை பயன்படுத்த அறிவுறுத்துகிறார். அவர் கூறும் மாஸ்க், வாழைப்பழ ஹேர் மாஸ்க். இதனைத் தலைமுடியில் உபயோகிக்கும்போது ஊட்டச்சத்து கிடைத்து அவை மென்மையாகிறது.
இந்த மாஸ்க் தயாரிக்க தேவையான பொருட்கள்,
ஒரு பழுத்த வாழைப்பழம்
ஒரு தேக்கரண்டி தேன்
இரண்டு தேக்கரண்டி தேங்காய் பால் பவுடர்
செய்முறை
வாழைப்பழம், தேன், தேங்காய் பால் பவுடர் மூன்றையும் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். அதனை வடிகட்டி ஒரு பாட்டிலில் சேமிக்கவும். பிறகு கூந்தலை நன்கு அலசி சுத்தம் செய்துகொள்ளவும். சுத்தமான முடியில் மாஸ்கை அப்ளை செய்யவும். பிறகு அந்த மாஸ்க்கின் மீது ஷவர் கேப் அணிந்து நீண்ட நேரம் ஊற வைக்கவும். பின்னர் ஷவர் கேப்பை கழற்றி கூந்தலை சுத்தமான குளிர்ந்த நீரில் கழுவவும். இதனை வாரம் ஒருமுறை தவறாமல் செய்யவும்.
இதனால் ஏற்படும் பயன்கள்:
வாழைப்பழத்தில் வைட்டமின்கள் ஏ, பி, ஈ மற்றும் பொட்டாசியம் ஆகியவை அதிகம் உள்ளது. இது கூந்தலின் அமைப்பை சீராக்கி வலிமையாகவும் வழுவழுப்பானதாகவும் ஆக்குகிறது. இதனால் முடி உடைவது தடுக்கப்படுகிறது. இந்த மாஸ்க்கில் சேர்க்கப்பட்டுள்ள தேன் ஒரு இயற்கையான மாய்ஸ்சரைஸர். இது தலையில் பொடுகு தங்காமல் பாதுகாக்கிறது. உச்சந்தலையை ஆழமாக சுத்தம் செய்கிறது. தேங்காய் பால் இயற்கையாக மென்மை படுத்துபவை. இதனை தலையில் அப்ளை செய்யும்போது இயற்கையாக முடியை மென்மையானதாக்குகிறது. மேலும் இதில் இருக்கும் ஆக்சிஜன் கூந்தலை வலுவாக்குகிறது. ஆன்லைனில் இதுபோன்ற மாஸ்க்குகளை வாங்குவதை விட வீட்டிலேயே இதனை முயற்சி செய்யலாம் என்கிறார் மருத்துவர் சோன்வானே