• தேவையற்ற பதட்டம் வேண்டாமே!


"வா! வா! என் தேவதையே!" எனப் பாட்டுப்பாடி குட்டிஉயிரை வரவேற்க ஆயத்தமாகி இருக்கும் நேரமிது. நிறைவு மாதமான இந்நேரத்தின் ஒவ்வொரு மணித்துளியும் எதிர்பார்ப்பும் கவனமும் நிறைந்தவை. அதுவரை மாதாந்திரமாக இருந்து மாதம் இருமுறை என மாறி தற்போது வாரம் ஒருமுறை பரிசோதனை செல்லத் தொடங்கியிருப்போம். இந்தநாட்களில் எந்த நேரத்தில் பிரசவ வலி ஏற்படுமோ என்கிற பதட்டம் மனதில் இருப்பது மிக இயல்பானதே. "நானெல்லாம் பயப்படல" என வெளியே தைரியமாக சொல்லிக்கொண்டாலும் உள்ளூற 'திக் திக் பக் பக்' நிமிடங்கள்தான். இந்த 'திக் திக்' நிமிடங்களை திறம்பட எதிர்கொண்டுவிட்டால் பேறுகாலம் சிரமமின்றி இருக்கும். எப்படியும் நாம்தாம் பேறுகால வலியை எதிர்கொள்ளப் போகிறோம். அதனால் அது எப்படி இருக்கும்; அந்த நேரத்தில் எப்படி சமாளிப்போம் போன்ற சிந்தனைக்குள் போகாமல் இருப்பதே சிறப்பு. "சமாளிக்க முடியாம போயிடுமோ" என்ற குழப்பத்தோடு ஒருநாள் இரவு உறங்கிவிட்டேன். மறுநாள் வழக்கமான செக்-அப். எப்போதும் சீரான அளவிலிருக்கும் ரத்த அழுத்தம் அன்று 'சர்ர்ர்ர்ர்'ரென உயரவே, "வீட்டில் ஏதாவது பிரச்சனையா மா?" என மருத்துவர் கேட்டதோடு "எதற்கும் ஒரு இ.சி.ஜி பார்த்துவிடுவோம்" என்று எழுதியும் கொடுத்தார். இ.சி.ஜி அறைக்கு எதிரே வரிசையில் காத்திருந்த நேரத்தில் மூளை கொஞ்சம் நிதானமாக சிந்திக்கத் தொடங்கியது. இத்தனை நாட்கள் தெளிவாகவும் மகிழ்வாகவும் பேறுகாலத்தை எதிர்கொண்ட நம்மால் இன்னும் ஓரிரு வாரங்களை சமாளிக்க முடியாதா? என மனதுக்குள் கேள்வி எழ, கண்களை மூடி கொஞ்சம் மனதை நிதானப்படுத்திக் கொண்டேன். அரைமணி நேரத்திற்குப் பிறகு படபடப்பு குறைந்ததுபோலத் தெரிந்தது. இ.சி.ஜி தேவைப்படாது என யோசித்தவாறு மருத்துவரை மீண்டும் சந்தித்து ரத்த அழுத்த அளவையும் இதயத்துடிப்பையும் பரிசோதிக்கச் சொல்லிக் கேட்டேன். மறுக்காமல் அவரும் பரிசோதித்து "தற்போது இதயத்துடிப்பு அளவு சீராகியிருக்கிறது" என்றார். மீண்டும் படபடப்பாக இருந்தால் தாமதிக்காமல் வந்து இ.சி.ஜி எடுத்துக்கொள்ளச் சொன்னார். "அப்பாடா" என இருந்தது. மீண்டும் படபடப்பு பக்கமே மனம் போகவில்லை. ஒரு சிறிய பதட்டம் இ.சி.ஜி பார்க்கச்சொல்லுமளவுக்குப் போனதை நினைத்தால் இப்போது சிரிப்பாக இருக்கிறது.



கருவுற்ற தாய்


 



  • பணமாக இருக்கட்டுமே!


தேதி நெருங்கும் நாட்களில் டெபிட்/கிரெடிட் கார்டு இருக்கிறதே என எண்ணாமல் கையில் பணமாக ஓரளவு தொகையை வைத்துக்கொள்ளுங்கள். மருந்து மாத்திரை வாங்க, டீ காபி வாங்க, அவசரமாக விடுபட்ட ஏதோ ஒன்றை வாங்க என எல்லாவற்றிற்கும் அந்த நேரத்திற்கு ஏ.டி.எம் மையத்தையோ, ஃபோன் பே, ஜி பே போன்றவற்றை மட்டுமே நம்பி இருக்க வேண்டாம்.  சிலநேரங்களில் பணம் சென்றதாக நமக்கும் சர்வர் பிரச்சனை என அவர்களுக்கும் காட்டி, பிடிபட்ட தொகை இரண்டு வேலை நாட்களுக்குள் திரும்பவரும் என சொல்லும்போது நாம் கையில் வைத்திருந்த தொகையிலிருந்து ஒரு தொகை தேவையின்றி குறையும். அது திரும்ப வரும்வரை நாம் காத்திருக்க வேண்டிய சிக்கலைத் தவிர்க்க கொஞ்சம் பணம் கையில் இருக்கட்டும்.


யாவும் சுகமே!


இயற்கை முறையில் பிரசவம் அல்லது அறுவை சிகிச்சை முறையில் பிரசவம் என எதுவாக இருந்தாலும் தாய் மற்றும் குழந்தையின் நலனிலிருந்து மருத்துவர்கள் எடுக்கும் முடிவுக்கு நாம் ஒத்துழைக்க வேண்டும். ராசி, நட்சத்திரம், நேரம், காலம் இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு,  மருத்துவர் குறிப்பிட்ட கெடு (due) தேதிக்கு முன்னரோ பின்னரோ நாமே வற்புறுத்தி அறுவைசிகிச்சை செய்யச்சொல்லி மருத்துவரிடம் கேட்பது மிகமிகத் தவறானது. கருவிலிருக்கிற குழந்தையின் மூளைவளர்ச்சி கடைசி வாரத்தின் கடைசி நாள்வரைகூட நிகழும் என்கிறது அறிவியல். அறிவியலுக்கு எதிராக நாள் கிழமைகளை கணக்குப்பார்த்து குழந்தையின் வளர்ச்சியை வீண்செய்ய நமக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை உணர்ந்து செயல்படுவோம். "இடுப்புவலி தாங்க மாட்டாங்க; சிசேரியன் செஞ்சடுங்க",  " செவ்வாய்க்கிழமை தேதி சொல்லியிருக்கீங்க. விடிஞ்சதும் புதன் ஆகிடும். அப்ப செஞ்சிடுங்க" போன்ற குரல்கள் மருத்துவமனைகளில் நிரம்பக் கேட்கின்றன. நமது சிறிய தாமதத்தால் குழந்தை தாயின் கருப்பையிலிருக்கும் தண்ணீரைக் குடித்தால்கூட அது குழந்தையின் நலனுக்குக் கேடு. வெளிவரும் தேதியையும் நேரத்தையும் உள்ளிருக்கிற குழந்தையும் பேறுபார்க்கிற மருத்துவரும் முடிவுசெய்யட்டும். நாம் மகிழ்வோடு குழந்தையைக் கையிலேந்தக் காத்திருப்போம்! குழந்தையின் முதல் அழுகை கேட்டு வீடெங்கும் மகிழ்ச்சி படரட்டும்!


- நிறைவடைந்தது.


(குழந்தை பிறப்பு முதல் வளர்ப்பு சார்ந்த பகிர்வுகள் அடுத்த தொடரில்)