யாரோ ஒருவருக்கு தொலைபேசி மூலம் அழைத்து பேசவோ, அல்லது யாரோ ஒருவர் நமது எண்ணுக்கு அழைத்தாலோ ஏற்படும் சிறிய பதற்றம் - சோசியல் ஆங்சைட்டி பிரச்சனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது சாதாரண பதற்றம் என்பதை தாண்டி, நம் சமூக வாழ்விலும், உறவிலும், வேலையிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய விஷயம் ஆகும்.


ஒலிக்கும் தொலைபேசியின் சத்தம் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் உடல் உணர்வுகளின் வெவ்வேறான அடுக்கைத் தூண்டலாம். சிலருக்கு அவர்கள் ரிங்டோனாக வைத்திருக்கும் பாடல் அல்லது, டியுனோ கூட பிடிக்காமல் போகலாம், அதற்கும் இந்த பதற்றம்தான் காரணம். பொதுவெளியில் அதிகம் பேசப்படாத இந்த பரவலான, முக்கியமான பிரச்சனை மீது வெளிச்சம் பாய்ச்சியுள்ளார், புகழ்பெற்ற தெரபிஸ்ட் அலிசன் செபோனாரா. சமீபத்தில் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் இதுகுறித்த முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.


உரையாடல்களில் போதுமானதாக இல்லை


தொலைபேசி அழைப்பு குறித்து பதற்றப்படுபவர்கள் பெரும்பாலும் தவறான விஷயத்தைச் சொல்லிவிடுவார்கள் என்றோ, அல்லது மற்றவர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் இல்லாமலோ பயப்படுவார்கள். இந்த பயம், வெளியில் நாம் அறிவுடையவராக தோன்ற வேண்டும் என்ற மனித விருப்பத்தில் இருந்து உருவாகிறது. அல்லது சங்கடமாக உணர்வதற்கோ, நம்மைப் பற்றி எதையோ கற்பனை செய்வார்கள் என்றோ அஞ்சுவதும் காரணம் ஆகலாம். 






திடீர் மௌனங்களின் பயம்


ஃபோன் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென ஒரு புறமும் அமைதியாகி ஒரு நிசப்தம் நிலவும் அல்லவா? அதனை கடந்து வர சிரமப்படும் சிலருக்கு இந்த பிரச்சினை ஏற்படலாம். அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் திணறுவது சமாளிப்பதற்கு கடினமான இடம் ஆகும். அழைப்பை திடீரென முடிக்கும் எண்ணத்தால் இந்தப் பதற்றம் மேலும் தீவிரமடையக்கூடும், ஏனெனில் அது அவர்களை மேலும் கவலையுடனும் சமூக ரீதியாக மோசமாகவும் உணர வைக்கும்.


தொடர்புடைய செய்திகள்: VJS50 Title Maharaja: தென்மேற்கு பருவக்காற்றில் தொடங்கிய பயணம்.. பாலிவுட்டில் ஜவான்.. வெளியானது விஜய் சேதுபதியின் 50-வது பட டைட்டில்


வரும் அழைப்புகளில் அவசரத்தை உணருதல்


குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் ஆதிக்கம் செலுத்தும் சகாப்தத்தில், தொலைபேசி அழைப்பைப் பெறுவது அரிதான நிகழ்வாக இருந்தது. இதன் விளைவாக, தொலைபேசி அழைப்பு பற்றி பதற்றம் உள்ள நபர்கள் உள்வரும் அழைப்பு அவசரமாக எடுக்க வேண்டும் என்று தானாகவே கருதிக்கொள்வார்கள். இந்த எதிர்பார்ப்பு, அழைப்பிற்கு பதிலளிப்பதற்கு முன் அவர்களின் பதற்றத்தை அதிகரிக்கலாம்.


கவலையை மறைத்தல்


தற்போது இருந்து கொண்டிருக்கும் இடம் ஒரு உரையாடலில் ஈடுபடுவதற்கு சரியான இடம் இல்லை என்று ஒருவர் உணரலாம். அதுவே பதற்றத்தை ஏற்படுத்தலாம். அந்த இடத்தில் அவர்கள் தங்கள் பதற்றத்தை மறைப்பதற்கும், ஒரு இணக்கமான நடத்தையைப் பேணுவதற்கும் சுற்றுசூழல் அழுத்தம் கொடுக்கும், அதுவும் நமக்கு எதிரானதாக தான் சென்று முடியும்.



அதிக சிந்தனை மற்றும் ஒத்திகை


ஒரு தொலைபேசி அழைப்பின் போது என்ன பேசுவது என்று தெரியாத பயம், அதுபற்றி முன்கூட்டியே சிந்திக்கவும் ஒத்திகை பார்க்கவும் வழிவகுக்கும். ஃபோன் அழைப்பு பதற்றம் உள்ளவர்கள், தங்களுக்குச் சரியான வார்த்தைகளைச் சொல்லத் தெரியாததுபோல் உணர்கிறார்கள், மேலும் இந்த நிச்சயமற்றதன்மை அதிகப்படியான மனத் தயாரிப்பைத் தூண்டும், அதுவே அதிக பதற்றத்திற்கு வழி வகுக்கும்.


அழைப்பின் நோக்கத்தை மறந்துவிடுமோ என்ற பயம்


தொலைபேசி அழைப்பு பதற்றத்திற்கு மற்றொரு பொதுவான காரணம், முதலில் அழைப்பதற்கான காரணத்தை மறந்துவிடுமோ என்ற பயம். அழைப்பின் நோக்கத்தை நினைவில் வைத்துக்கொள்வதற்கான அழுத்தம் கூடுதல் மன அழுத்தமாக இருக்கும். இது அந்த பதற்றத்தை உணரும் தன்மையை மேலும் அதிகமாக்குகிறது.


'இல்லை' என்று சொல்வது சிரமம்


இந்த பிரச்சனை கொண்ட நபர்களுக்கு, மிகப் பொதுவான காரணம், அவர்கள் மறுக்க முடியாதபடியான எதையாவது செய்யும்படி கேட்கப்படுவார்கள் என்ற பயம் அதிகமாக இருப்பதுதான்.


எந்த கோரிக்கைக்கும் இணங்க வேண்டிய கடமை உணர்வை அவர்கள் உணரலாம், 'இல்லை' ’முடியாது’ என்று சொன்னால் அது தவறாகி விடுமோ என்ற பயம் தான் அது.