வெப்பத்தை வெல்ல சிறந்த வழி எதுவென்று யாரை கேட்டாலும் பழங்களை சொல்வார்கள். அப்படி நீங்கள் நம்பவில்லை என்றாலும், இந்த விடியோவில் ஒரு யானை செய்வதை பார்த்தால் கண்டிப்பாக நம்புவீர்கள். யானை ஒன்று தனக்கு பிடித்த பலாப்பழத்தை எடுப்பதற்காக மரத்தை அசைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.






பலாப்பழத்தை மரத்திலிருந்து விழவைத்து சாப்பிடும் யானை


குவாஹாட்டியில் உள்ள நரேங்கி ராணுவ முகாமில்தான் இந்த அற்புதமான விடியோ பதிவாகியுள்ளது. சாதுவான யானை ஒன்று மரத்தை சாமர்த்தியமாக அசைத்து, பலாப்பழங்களை தரையில் விழ வைக்கிறது. விழுந்தவுடன், யானை அதன் தும்பிக்கையை பயன்படுத்தி அந்த பழங்களை எடுத்து சாப்பிடும் அற்புதமான விடியோ வைரலாகி வருகிறது. 






யோகா செய்யும் யானைகள்


முன்னதாக, மற்றொரு வைரல் வீடியோ, இங்கிலாந்தில் உள்ள ஹூஸ்டன் மிருகக்காட்சிசாலையில் நடந்த ஒரு கண்கவர் காட்சியைக் காட்டியது. நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக யானைகளின் குழுக்கள் தங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக யோகாவில் ஈடுபடுவது விடியோவில் தெரிகிறது. மிருகக்காட்சிசாலையில் சுமார் 12 யானைகள் சேர்ந்து, அனைத்தும் யோகா செய்கின்றன. அதில் டெஸ் என்னும் 40 வயதான 3000 கிலோ எடையுள்ள யானை, குறிப்பிடத்தக்க வகையில், மனிதர்களுக்கே சவாலான யோகாசனங்களை சிரமமின்றி செய்கிறது. 






வண்ணத்துப்பூச்சியை துரத்தும் யானை


கவிதையின் டைட்டில் போல இருக்கிறதல்லவா… இந்த காட்சிகளே கவிதைதான். காட்டில் இருந்து எடுக்கப்பட்ட மற்றொரு வைரல் க்ளிப்பில், ஒரு குட்டி யானை வண்ணத்துப்பூச்சிகளை துரத்தும், இதயத்தை இலகுவாக்கும் வீடியோ பதிவாகி உள்ளது. இந்த வீடியோவில், குட்டி யானை மகிழ்ச்சியுடன் சாலையில் வளைந்து, வளைந்து ஓடி, அதைச் சுற்றி படபடக்கும் வண்ணத்துப்பூச்சிகளைத் துரத்த முயலும் அழகான காட்சியை காணலாம். இந்த குட்டி யானை வெளிப்படுத்திய அப்பாவித்தனம் மற்றும் அப்பழுக்கற்ற மகிழ்ச்சி இந்த வீடியோவை தவிர்க்க முடியாத காட்சியாக மாற்றுகிறது.