கிரிக்கெட் உலகமே கடந்த சில வாரங்களாக தீவிரமாக உரையாடிக்கொண்டு இருந்த விஷயம் உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தான். இந்த போட்டி இன்று அதாவது ஜூன் 7ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்டன. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச முடிவு செய்தார். 


அதன்படி ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்ஸை டேவிட் வார்னர் மற்றும் கவாஜா தொடங்கினர். சிறப்பாக  பந்து வீசிய மிகமது சிராஜ் கவாஜாவை ரன்  ஏதும் எடுக்க விடாமல் டக் அவுட் செய்தார். இதனால் இந்திய அணிக்கு பெரும் உத்வேகமாக இருந்தது. அதன்பின்னர் சிறப்பாக ஆடி வந்த வார்னர் அரைசதம் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 43 ரன்னில் இருந்த போது தனது விக்கெட்டை ஷர்துல் தாக்குர் பந்து வீச்சில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். இதன் பின்னர் இந்திய பந்து வீச்சுக்கு சவால் கொடுத்து வந்த லபுசேன் முகமது ஷமியிடம் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அப்போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் சேர்த்திருந்தது. 


அவ்வளவு தான் இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை கைப்பற்றி தனது ஆதிக்கத்தை தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் சிறப்பாக ஆடினர். இவர்களது சிறப்பான ஆட்டத்தினால் ஆஸ்திரேலிய அணி மேற்கொண்டு விக்கெட்டுகளை இழக்காமல் பார்த்துக்கொண்டனர். 


இருவரும் இந்திய பந்து வீச்சை சராமாறியாக விளாசத் தொடங்கினர். அதிலும் குறிப்பாக ஸ்டீவ் ஸ்மித் நிதானமாக ஆட, டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடினார். இந்திய பந்து வீச்சினை நொறுங்கச் செய்தனர். அதிலும் குறிப்பாக வேகப்பந்து வீச்சில் அதிரடியாக பவுண்டரிகள் விளாசினார் ஹெட். இவரது அதிரடியால் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அதிலும் குறிப்பாக ஹெட் ஒருநாள் போட்டி போல் ஆடிக்கொண்டு இருந்தார். இதனால் இவர் அதிரடியாக அரைசதத்தினைக் கடந்து சதத்தினை நோக்கி முன்னேறினார். 106 பந்தில் தனது சதத்தினை எட்டினார். அதிலும் குறிப்பாக உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் இது இவரது சர்வதேச டெஸ்ட் போட்டியில் 6வது டெஸ்ட் சதமாகும். 


அதன் பின்னரும் சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலிய அணி 85 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 327 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் வெளிச்சமின்மை காராணமாக போட்டி நிறுத்தப்பட்டது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஹெட் 156 பந்தில்  146 ரன்களுடனும் ஸ்டீவ் ஸ்மித் 227 பந்துகளில்  95 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.