இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான மக்கள் இறப்பதற்கு மாரடைப்பு மிக முக்கிய காரணமாக இருக்கிறது. இதற்கு காரணம் இதன் அறிகுறிகளை கண்டு கொள்ளாமல் விடுவது தான். மார்பில் வலி, குமட்டல், வாந்தி, கை, தோள்பட்டை, தாடையில் வலி தென்பட்டால் உடனே அவசர எண்ணை அழைத்து சிகிச்சை பெறுங்கள். மாரடைப்பு என்பது மற்ற நோய்களைப் போல எந்த அறிகுறியும் இல்லாமல் திடீரென வருவது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் மாரடைப்பும் சில அறிகுறிகளை நம்மிடம் காட்டிவிட்டுத்தான் வரும்.


கொரோனா தொடங்கிய பிறகு, இந்த நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது மற்றும் இளம் வயதுடைய இதய நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்றே கூற வேண்டும். மோசமான வாழ்க்கை முறை தேர்வுகள், ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கம் மற்றும் அதிக உடற்பயிற்சி உள்ளிட்ட காரணிகளின் எண்ணிக்கை மாரடைப்பு நோயாளிகளின் அதிகரிப்புக்கு பங்களித்துள்ளது.


சரியாக மாரடைப்பு எப்போது ஏற்படும் என்று சொல்ல முடியாது என்றாலும், நமது உடலின் சில பகுதிகள் வரவிருக்கும் மாரடைப்பை குறித்து சில சமிக்ஞைகளை நமக்கு தரலாம். குறிப்பிட்ட உடல் பாகங்களில் வலி இருப்பது மாரடைப்பின் அறிகுறி எனலாம். அவை எந்தெந்த இடம் என்பதை பார்க்கலாம்.



நெஞ்சு: நெஞ்சு வலி என்பது மாரடைப்பின் மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்று. மார்பில் அசெளகரியம் தென்படும். அமெரிக்க இதய அமைப்பு கூற்றுப்படி, மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்னால் மார்பின் மைய பகுதியில் அசௌகரியமான அழுத்தம், வலி போன்றவற்றை அனுபவிக்கலாம். வலி மற்றும் அழுத்தம் ஒரு சில நிமிடங்களுக்கு மேல் நீடிக்கலாம். அப்படியானால், உடனடியாக உங்கள் மருத்துவரைத் தொடர்புகொள்ள வேண்டியது அவசியம்.



முதுகுத்தண்டு: நெஞ்சுவலி எல்லோரும் அறிந்த ஒரு மாரடைப்பின் அறிகுறி எனும் பட்சத்தில், முதுகு வலி மிகவும் அவசியமான அறிகுறிகளில் ஒன்றாக இருக்கிறது, குறிப்பாக பெண்களுக்கு. அமெரிக்க இதய அமைப்பு ஆராய்ச்சியின்படி ஆண்களை விட பெண்கள் மாரடைப்பு வரும் முன் முதுகு வலி இருந்ததாக கூறியிருக்கிறார்கள்.



தாடை: உங்கள் தாடை பகுதியில் வலி ஏற்படுவது என்பது ஒரு தசைகோளாறு அல்லது பல் வலியை விட அதிகமாக இருக்கலாம். குறிப்பாக பெண்களுக்கு, முகத்தின் இடது பக்கத்தில் ஏற்படும் தாடை வலி மாரடைப்பின் ஒரு பொதுவான அறிகுறியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பொதுவாக நமக்கு சலதோஷம் பிடிக்கும் சமயங்களிலும் தொண்டை மற்றும் தாடைகளில் வலி உண்டாகும். ஆனால் மாரடைப்பின் போது நெஞ்சில் ஏற்படும் வலி அப்படியே தாடை, தொண்டை வரை தாக்கத்தை ஏற்படுத்தும். இது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். எனவே அந்த மாதிரி இருந்தால் அவசர எண்ணை அழையுங்கள். தொண்டைவலி வந்தால் ஏதோ ஜலதோஷம் பிரச்சினை என்று மட்டும் நினைத்து அஜாக்கிரதையாக விட்டுவிடாதீர்கள்.



கழுத்து: இதயத் தசைக்குள் இரத்த ஓட்டத்தைத் தடுக்கும் இரத்த உறைவு காரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது. இதற்கான அறிகுறியாக உங்கள் மார்பு பகுதியில் இருந்து அசௌகரியம் தொடங்கலாம் என்றாலும், வலி சில நேரங்களில் உங்கள் கழுத்துவரை பரவக்கூடும். கழுத்து பகுதியில் விறைப்பு, தசை அழுத்தம் மற்றும் திரிபு போன்ற அறிகுறிகள் இருந்தால், இது மாரடைப்பு காரணமாகவும் ஏற்படலாம்.



தோள்பட்டை: கழுத்து, தாடை மற்றும் தோள்களில் ஒரு அசௌகரியமான வலி, மார்பில் இருந்து தொடக்கப் புள்ளியாக வரும் போது, அது மாரடைப்பின் ஒரு அறிகுறியாக இருக்கலாம். தோள்பட்டையில் அதிக வலி இருந்தால், குறிப்பாக அது மார்பில் இருந்து இடது தாடை, கை அல்லது கழுத்து போன்ற பகுதிகளில் என்றால், நீங்கள் மருத்துவ உதவியை நாட வேண்டியது மிகவும் அவசியம்.



இடது கை: இதயத் தசைக்கு செல்லும் இரத்த ஓட்ட அடைப்பு காரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது. அது உங்கள் இடது கையில் வலியை ஏற்படுத்தலாம். இடது கையில் லேசான வலி ஒரு அறிகுறியாக இருக்கலாம் என்றாலும், திடீர் என்று ஏற்படும் மற்றும் அசாதாரண வலி மாரடைப்புக்கு ஒரு ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். எனவே இது போன்ற தருணங்களில், நீங்கள் மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம்.


ஒரு நபர் மாரடைப்பு அல்லது இதய பிரச்சனையால் பாதிக்கப்படும்போது, அருகிலுள்ள மருத்துவ மருத்துவமனைக்குத் தெரிவிக்கவும், உடனடியாக மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும்.