உலகத்திலுள்ள சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்று காற்று மாசு. உலக சுகாதார மையத்தின் தரவுகளின்படி 90% மக்கள் தொகை மாசு அடைந்த காற்றை சுவாசித்து வருவதாக தெரியவந்துள்ளது. இந்தச் சூழலில் காற்று மாசு தொடர்பான பிரச்னைகள் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்போது ஒரு ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி அதிகப்படியான காற்று மாசு காரணமாக குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதாவது கருவுற்று இருக்கும் பெண்கள் மாசு அடைந்த காற்றை சுவாசிக்கும் போது அவர்களுக்குள் வளரும் குழந்தையை அது நேரடியாக பாதிக்கும் என்று கருதப்படுகிறது. அதாவது அந்த குழந்தையின் மூளை வளர்ச்சியில் சில தடைகளை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக மங்கோலியா நாட்டில் சில ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில் மாசு அடைந்த காற்றை சுவாசித்த பெண்கள் மற்றும் காற்று மாசை அகற்றும் கருவியை பயன்படுத்திய பெண்கள் தனித் தனியே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் மாசு அடைந்த காற்றை சுவாசித்த பெண்களுக்கு பிறந்த குழந்தைகள் 4 வயதை எட்டிய போது அவர்களுடைய மூளை வளர்ச்சி கணக்கிடப்பட்டது.
அதேபோல் ஒரளவு சுத்தமான காற்றை சுவாசித்த பெண்களுக்கு பிறந்த குழந்தைகள் 4 வயதை எட்டிய போது அவர்களுடைய மூளை வளர்ச்சியும் கணக்கிடப்பட்டது. இந்த இரண்டு தரவுகளையும் வைத்து ஆராய்ந்து பார்த்தப் போது சுத்தமான காற்றை சுவாசித்த பெண்களின் குழந்தைகள் மூளை வளர்ச்சி 2.8 சதவிகிதம் அதிகமாக இருந்தது. இந்த தரவுகள் ஏற்கெனவே 2014ஆம் ஆண்டு வெளியான ஆய்வு முடிவுகளையும் உறுதிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தாக ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.
அதாவது காற்று மாசுவிற்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் சில தொடர்புகள் உண்டு என்பது உறுதியாகியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ஆகவே சுற்றுச்சூழல் பிரச்னைகளில் மிகவும் முக்கியமான காற்று மாசு நம்முடைய வருங்காலத்தை மிகவும் அச்சுறுத்தும் ஒன்று என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனவே காற்று மாசுவை குறைக்க தேவையான நடவடிக்கை உடனடியாக நாம் எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்