நாட்டில் 7 முதல் 12 வயதுடைய குழந்தைகளுக்கு சீரம் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் கோவோவாக்ஸ் தடுப்பூசியை வழங்க மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டுத்துறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.


கொரோனா பெருந்தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உலகை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தொற்று எதிரான பெரிய ஆயுதமாக தடுப்பூசி விளங்கி வருகிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களுடைய மக்களுக்கு கொரோனா தடுப்பூசி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது.


இதற்கு முன்னதாக நாடு முழுவதும் 12 வயது முதல்15 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது.  கடந்த ஏப்ரல் மாதம் கோர்பேவாக்ஸ் தடுப்பூசி 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு பயன்படுத்த அவசர கால அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு முன்பாக இந்த தடுப்பூசி 12-14 வயது வரையிலான சிறுவர்களுக்கு மட்டும் செலுத்தப்பட்டு வந்தது. கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை பயோலாஜிகல் ஈ நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் தடுப்பூசிக்கான விலையை 840 ரூபாயிலிருந்து 250 ரூபாயாக கடந்த மாதம் குறைத்தது. இந்த விலை தனியார் தடுப்பூசி மையங்களில் வசூலிக்கப்பட்டு வருகிறது.


கடந்த மார்ச் மாதம் இந்த தடுப்பூசி இந்தியாவில் முதல் முறையாக 12 முதல் 14 வயதுக்குட்பட்டோருக்கு செலுத்தப்பட்டது. 
இந்நிலையில் தற்போது நாட்டில் 7 முதல் 12 வயதுடைய குழந்தைகளுக்கு சீரம் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் கோவோவாக்ஸ் தடுப்பூசியை வழங்க மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டுத்துறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.






கட்டாயப்படுத்த முடியாது:


கொரோனாவுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசிதான். என்றாலும்கூட, கொரோனா தடுப்பூசி போட யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி, கொள்கை முடிவு எடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அரசியல் சாசனப் பிரிவு 21 ன் கீழ் தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொள்ள எந்தவொரு தனிநபரையும் கட்டாயப்படுத்த முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


மேலும், மத்திய அரசு முன்னெடுக்கும் கொரோனா தடுப்பு இயக்கம் திருப்திகரமாக உள்ளது என்றும், தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் நீக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.