சமீபத்தில் சில மாதங்களுக்கு முன், நேர்காணல் ஒன்றில் தனது ஃபிட்னெஸ் குறித்தும், உடல்நலன் குறித்தும் பேசியிருந்தார் நடிகர் சரத் குமார். அந்த நேர்காணலில் அவர் பேசியதில் இருந்து முக்கியமானவற்றை இங்கே கொடுத்துள்ளோம்.


தனது ஃபிட்னெஸ் குறித்து பேசிய நடிகர் சரத்குமார், `தினமும் காலையில் ஒரு காபி, மாலை ஒரு காபி என்பது தவறாமல் நான் கொண்டிருக்கும் பழக்கம். அதற்குப் பிறகு, எனது உடற்பயிற்சிகளை செய்துவிட்டு, நான் படப்பிடிப்புகளுக்குச் சென்றுவிடுவேன். நான் மிகக் குறைவாக உணவு சாப்பிடுவேன்.. தேவையான உணவு மட்டுமே சாப்பிடுவேன்.. தற்போது நான் டயட்டில் இருக்கிறேன். என் முழங்காலில் என்றோ உடைந்த எலும்பு ஒன்றுக்காக அறுவை சிகிச்சை செய்திருக்கிறேன். தற்போது நான் `பொன்னியின் செல்வன்’ படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, கால் மடங்கியது.. என்னால் நடக்க முடியவில்லை. மேலும் வலியும் அதிகமாக இருந்தது. அதனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, சுமார் 10 கிலோ எடை அதிகரித்தது. அதனைக் குறைப்பதற்காக உடற்பயிற்சி செய்யத் தொடங்கினேன்.. மேலும் டயட் மூலம் உடலின் எடையை விரைவில் குறைக்க முடியும். கார்டியோ உடற்பயிற்சிகளை மேற்கொள்ள நேரம் கிடைப்பதில்லை. படப்பிடிப்புப் பணிகள் இருப்பதால், டயட் மூலமாக மட்டுமே எடை குறைக்க முடியும். எனவே என் டயட்டில் பழங்கள் மட்டுமே இருப்பதாக பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். 


மேலும் அவர், `பழங்கள் மட்டுமின்றி, மதிய உணவாக இரண்டு துண்டு சிக்கன், இரவில் இரண்டு துண்டு சிக்கன் ஆகியவற்றை மட்டுமே உண்கிறேன். இதனால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைப்பதோடு, எடையும் குறையும். இவை மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று லிட்டர் குடிநீர் பருகுகிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார். 



ஃபிட்டாக இருப்போருக்கும் மாரடைப்பு முதலான பிரச்னைகள் ஏற்படுவது குறித்து நடிகர் சரத்குமாரிடம் கேட்கப்பட்ட போது அவர், `சமீபத்தில் புனீத் ராஜ்குமார் மறைவுக்குப் பிறகு, இவ்வளவு ஃபிட்டான நபருக்கு எப்படி மாரடைப்பு வந்தது என்ற கேள்வி பலரிடமும் இருந்து வருகிறது. புனீத் ராஜ்குமார் எனக்கு நெருக்கமான நண்பர்.. அவரது மரணம் எனக்கு அதிர்ச்சி அளித்ததோடு, மிகவும் கவலை தந்த ஒன்று. தினமும் உடற்பயிற்சி செய்வோர் நூறு சதவிகிதம் ஃபிட்டாக இருப்பார்கள் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் உடலுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரியாது. சிக்ஸ் பேக் வைத்திருந்தாலும், எய்ட் பேக் வைத்திருந்தாலும் உடலுக்குள் என்ன நடக்கிறது என்பது தெரியப் போவதில்லை. எனவே ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது இரண்டு முறை முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம்’ என்று கூறியுள்ளார்.


தொடர்ந்து, `உங்களுக்குத் தெரியாமலே உடலின் சிறுநீரகம், இதயம் முதலானவற்றின் நிலைமை மாறியிருக்கலாம். அவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். அனைவரின் வாழ்க்கை முறைகளும் மாறிவிட்டன. எனவே இப்போது இது மிக முக்கியமானது. ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை முழு உடல் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இது அனைவராலும் முடியுமா என்று தெரியவில்லை. ஆனாலும் அரசு முன்வர வேண்டும். மக்கள் ஆரோக்கியமாக இருந்தால், நாடும் ஆரோக்கியமாக இருக்கும்.’ என்று கூறியுள்ளார்.