பனி மழை பொழியும் பகுதிகளுக்குச் சுற்றுலா செல்வது நம்மில் பலரின் கனவுகளுள் ஒன்றாக இருக்கும். தற்போது குளிர்காலம் என்பதால் பனிப் பிரதேசங்களுக்குப் பலரும் சுற்றுலா செல்வது வாடிக்கையான ஒன்றாக இருக்கிறது. பனிக்காலத்தின் போது பனிச் சறுக்கு விளையாடுவதற்கு இந்தியாவில் பஹல்கம், குல்மார்க், சோலாங்க் நாலா, ரோஹ்டாங் கணவாய், குஃப்ரி முதலான பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
பனிச் சறுக்கு விளையாட்டுக்கான உடையைப் புதிதாக வாங்கவோ, வாடகைக்கு எடுத்துக் கொள்ளவோ செய்யலாம். எனினும், பனி பொழியும் இடங்களுக்குச் சுற்றுலா செல்ல விரும்புவோர் சில பொருள்களை அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும். அவை என்ன என்பதை இங்கு காண்போம்.
1. பனிச் சறுக்கு விளையாட்டுக்கான உடையை அணிவதற்கு முன், உடலைச் சூடாக வைத்துக் கொள்வதற்கு ஒன்று அல்லது இரண்டு செட் உடைகளை உங்கள் தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளவும். இந்த உடைகள் கம்பளியால் செய்யப்பட்டிருந்தால், அது உங்களைச் சூடாகவும், இதமாகவும் வைத்துக் கொள்ள உதவும். இந்த உடைகளை அழகாக உருட்டி, உங்கள் டிராவல் பேக்கில் வைத்துக் கொண்டால், பேக்கில் இடப் பற்றாக்குறை இல்லாமல் சமாளிக்கலாம்.
2. லெதர் கையுறைகளைப் பயன்படுத்தாமல், கம்பளியால் செய்யப்பட்ட கையுறைகள் பயன்படுத்துவது சிறந்தது. கம்பளியால் செய்யப்பட்ட கையுறைகளைப் பயன்படுத்துவது உடலில் சூட்டை அதிகரிக்க உதவும்.
3. பனிச் சறுக்கு விளையாட்டுக்காக வாங்கும் உடைகள் இரண்டு லேயர்களால் செய்யப்பட்டவையா என்பதையும், தண்ணீர் புகாத அளவுக்கு இருக்கிறதா என்பதையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இந்த உடைகளை வாங்கும் போது, அதனைக் கடையில் அணிந்து பார்த்து வாங்குவது சிறந்தது.
4. பனிச் சறுக்கு உடைக்கு ஏற்ற பேண்ட், கழுத்தை மறைக்கும் துணி முதலானவற்றையும் வாங்கிக் கொள்ள மறக்கக் கூடாது. பனிச் சறுக்கு விளையாடி முடித்த பிறகு, உங்கள் விடுதி அல்லது வேறு இடத்திற்குச் சென்று பனிச் சறுக்கு உடையில் இருந்து உங்களுக்குத் தோதான வேறு ஒரு உடைக்கு மாறிக் கொள்ள வேண்டும்.
5. உங்கள் பேக்கிங்கின் போது அதிகமாக பேண்ட்கள் எடுத்துக் கொள்வது தேவையற்றது. இரண்டு நல்ல தடிமனான பேண்ட்களை எடுத்துச் செல்வது மட்டுமே போதுமானதாக இருக்கும். எனினும் உங்கள் கழுத்தைக் குளிரில் இருந்து காப்பதற்கு சால்வை அல்லது பிற துணிகளை எடுத்துக் கொள்வது அவசியம். மேலும், தலையையும், காதையும் மறைக்கும் அளவுக்குத் தொப்பி, குல்லா முதலானவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
6. பனிச் சறுக்கு விளையாடும் போது அணியும் கண்ணாடி, சாக்ஸ் முதலானவை அந்தந்த பகுதிகளில் விற்கப்படும். அவற்றை விளையாடும் முன் வாங்கி, விளையாடும் போது பயன்படுத்தவும்.
7. சுற்றுலா செல்லும் இடத்தில் வெந்நீர் எடுத்துச் செல்வதற்குத் தேவையான பாட்டில் ஒன்றையும் தயாராக எடுத்துச் செல்ல வேண்டும்.
இவற்றைப் பின்பற்றினால், உங்கள் குளிர்கால சுற்றுலாவும், பனிச் சறுக்கு விளையாட்டு அனுபவமும் சிறப்பாக அமையும்.