8 வடிவ நடைப்பயிற்சியால் இத்தனை நன்மைகளா என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு நன்மைகள் இருக்கின்றன. உடற்பயிற்சிகளிலேயே மிகவும் எளிமையான உடற்பயிற்சி நடைப்பயிற்சி தான். மருத்துவர்கள் எல்லோருக்கும் பரிந்துரைக்கும் பயிற்சியும் இதுதான்.
தற்போது வாழ்வியல் நோய்கள் மிகுந்து வரும் சூழலில் நடைப்பயிற்சி மீதான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இந்நிலையில், 8 வடிவ நடைப்பயிற்சி பற்றிய விழிப்புணர்வும் தற்போது அதிகரித்து வருகிறது.
எப்போது வழக்கத்திற்கு வந்தது?
1980களில் ஒரு மனநல மருத்துவமனையில் தான் இந்த இன்ஃபினிட்டி வாக் பழக்கத்துக்கு வந்துள்ளது. தமிழ் சித்தர்களும் இந்த 8 வடிவ நடைப்பயிற்சியை பரிந்துரைத்துள்ளனர். இந்த நடைப்பயிற்சி மொட்டை மாடி, பூங்கா உள்ளிட்ட மாசு இல்லாத இடங்களில் அதிக பலன் தரும். இந்த எட்டு வடிவத்தை தெற்கிலிருந்து வடக்கே 6 அடி அகலத்திலும் இதன் உயரம் 12 அடியும் இருப்பதுபோல் அமைக்க வேண்டும்.
எப்படி நடக்க வேண்டும்?
8 வடிவ நடைப்பயிற்சியை அதிகாலையில் செய்வது மிகவும் சிறந்தது. அதிகாலை நேரம் செய்ய வாய்ப்பில்லாவிட்டால் மாலையில் செய்யலாம். ஆனால் அதிகாலையில் வெறும் வயிற்றில் செய்ய வேண்டும். முதல் 15 நிமிடங்கள் தெற்கிலிருந்து மேற்காகவும். அடுத்த 15 நிமிடங்கள் மேற்கில் இருந்து வடக்கு நடக்க வேண்டும்.
என்னென்ன நன்மைகள்?
8 வடிவ நடைபயிற்சியின்போது காலில் செருப்பு போடக்கூடாது. இதனை வெறும் காலில் தான் நடக்கவேண்டும். அவ்வாறு நடக்கும்போதுதான் பாதத்தின் மையப்பகுதியில் அழுத்தம் நன்றாக ஏற்பட்டு உள்ளுறூப்புகள் நன்கு செயல்பட்டு குறிப்பிட்ட நோயின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.
தினந்தோறும் காலை மாலை என இரண்டு நேரங்களிலும் இப்பயிற்சியை செய்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். இந்த நடைபயிற்சியை காலை மற்றும் மாலை என இரண்டு நேரங்களிலும் செய்வதனால் ஒரு வருடத்தில் சர்க்கரை நோயில் இருந்து விடுபடலாம்.
சைனஸ், தலைவலி, மலச்சிக்கல், தைராய்டு பிரச்சினை, முதுகுவலி, கழுத்துவலி, சரியாகும். மேலும், கவனக்குவியல் உண்டாக்கும். உடல் எடை குறையும். கண்பார்வை பிரச்சினைகள் தீர 8 வடிவ நடைபயிற்சி மிகவும் சிறந்தது. இந்த நடைப்பயிற்சியை செய்யும்போது நமது கண்கள் அந்த கோடுகளை கூர்ந்து கவனிப்பதன் மூலம் கண்களில் உள்ள கருவிழி அனைத்து பக்கமும் அசைந்து பார்ப்பதனால் கண்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து பார்வைத் திறனை அதிகரிக்கும்.
உணவு உண்ட உடனேயே 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்ளக் கூடாது. உணவு சாப்பிட்டு 2 மணிநேரம் கழித்து இந்த நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். அறுவைசிகிச்சை செய்தவர்கள் 6 மாதகாலம் வரை இந்த 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்ளக் கூடாது. 6 மாதம் கழித்து டாக்டரின் ஆலோசனை பெற்ற பின்பு இப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.