உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் அமைந்துள்ளது கிராண்ட் ஓமேக்ஸ் செக்டார் 93பி. இந்த பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த் தியாகி. இவர் பா.ஜ.க.வின் கிஷான் மோர்ச்சா பிரிவு தேசிய குழு உறுப்பினராக உள்ளார் மற்றும் தேசிய துணை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.


ஸ்ரீகாந்த் தியாகி வசிக்கும் அபார்ட்மெண்ட்டிலே இளம் பெண் ஒருவரும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், ஸ்ரீகாந்த் தியாகிக்கும் அந்த இளம்பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அபார்ட்மெண்டின் வெளிப்பகுதியில் உள்ள நடைபாதை செல்லும் இடத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.




அப்போது, வாக்குவாதம் முற்றியபோது ஸ்ரீகாந்த் தியாகி அந்த பெண்ணை தள்ளி விட்டார். இதைக்கண்டு அக்கம்பக்கத்தினர் அவரைத் தடுத்தனர். ஸ்ரீகாந்த் தியாகி தள்ளிவிட்டதும் அந்த இளம்பெண் அவரை அடிக்க கை ஓங்கினார். இந்த சம்பவம் அனைத்தையும் அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






இதையடுத்து, காவல்துறையினர் இந்த வீடியோவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணை நடத்துவதை அறிந்த ஸ்ரீகாந்த் தியாகி தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து, அவரைப் பிடிக்க நான்கு தனிப்படைகளை போலீசார் அமைத்துள்ளனர். மேலும், ஸ்ரீகாந்த் தியாகியின் மனைவி, கார் ஓட்டுனர் மற்றும் மேலாளரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




இந்த நிலையில், பா.ஜ.க.வின் மூத்த தலைவர் ராஜ்குமார் சாஹர் ஸ்ரீகாந்த் தியாகிக்கும், பா.ஜ.க. கிசான் மோர்ச்சாவிற்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார். அபார்ட்மெண்ட்டின் பொதுவான பகுதியை ஆக்கிரமித்து ஸ்ரீகாந்த் தியாகி செடிகளை வளர்த்து வந்ததாகவும், அதை அகற்ற கூறியபோது இளம்பெண் மற்றும் அவரது கணவரை அவர் மிரட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பா.ஜ.க.வைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் தியாகி இளம்பெண்ணை தள்ளிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண