இந்தக் காலத்தில் சிறியவர்கள் முறை பெரியவர்கள் வரை ஸ்ட்ரெஸ் ஆட்டிப்படைக்கிறது. இதில் ப்ரெயின் ஃபாக் பற்றி சொல்ல வேண்டும் என்றால் சில நாட்கள் நம் மனம் வெற்றிடம் போல் இருக்கும். எதிலும் நாட்டத்துடன் ஈடுபட முடியாது. சரியாக கோர்வையாக பேசக் கூட சிரமமாக இருக்கும். எந்த முடிவும் எடுக்க முடியாது. இது தான் ப்ரெய்ன் ஃபாக். தூக்கமின்மை, அதிகப்படியான வேலை, மன அழுத்தம் ஆகியனவையே இதற்குக் காரணம்.


நீங்கள் உங்கள் மூளைக்கு ஓய்வற்ற வேலை கொடுத்தால் அது சோர்வடைந்துவிடும். ஆகையால் உங்கள் வேலைகளை முன்னிலைப்படுத்தி பட்டியலிடுங்கள். அதில் 1, 2 எண் கொண்டவை கட்டாயமாக முடிக்க வேண்டியவை. 3,4 நேரக் கட்டுப்பாடு இல்லாதவை, 5வது அந்த வேலையைச் செய்தால் அது போனஸ் என்று பட்டியலிடுங்கள். இப்படிச் செய்துவந்தால் சோர்வு தெரியாது.


நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்:


உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாள் முழுவதும் நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். இது உடல் சோர்வு, மனக் குழப்பம், சிந்தனைத் தேக்கத்தை தவிர்க்கும். குறைந்தது ஒரு நாளைக்கு 8 டம்ப்ளர் தண்ணீராவது அருந்த வேண்டும். அதேபோல் கஃபைன், சர்க்கரை நிறைந்த பானங்களை தவிர்த்துவிடுங்கள்.


தூக்கம் அவசியம்:


பொதுவாக மருத்துவரிடம் என்ன உபாதைக்கு சென்றாலும் பசி, தூக்கம் பற்றி விசாரிப்பார்கள். ஒரு மனிதருக்கு சராசரியாக ஒரு நாளில் குறைந்தது 7 மணி நேரம் முதல் அதிகபட்சம் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். இந்த தூக்கம் சீரானதாக ஆழமானதாக இருந்தால் போதும் சிந்தனைத் தேக்கத்திற்கு வாய்ப்பே இருக்காது.


உடற்பயிற்சி அவசியம்:


இன்றைய காலகட்டத்தில் பல்வேறு உபாதைகளுக்குக் காரணம் உடற்பயிற்சியின்மையாகத்தான் இருக்கிறது. அதனால் உடலுக்கு போதுமான உடற்பயிற்சி கொடுப்பது அவசியம். இது சிந்தனைத் திறனை ஊக்குவிக்கும். ப்ரெயின் டிரைவ்ட் நியூரோட்ரோபிக் ஃபேக்டர் எனப்படும் பிடிஎன்எஃப் புரதம் சீராக உருவாகும். ஒரு நாளில் 30 நிமிடங்கள் விறுவிறுப்பான நடைப்பயிற்சி மேற்கொண்டால் மூளைச் சோர்வு ஏற்படாது.


சமச்சீரான உணவை அருந்துங்கள்:


ஆரோக்கியமான வாழ்விற்கு சமச்சீரான உணவு ரொம்பவே அவசியம். இது மூளைச் சோர்வை நீக்கி சிந்தனைத் தேக்கத்தை ஏற்படுத்தும். அதனால் உணவில் மீன், உலர்பழங்கள், பெர்ரி வகைகள், கீரைகள், முழு தானியங்கள் ஆகியனவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். ஆப்பிள், அவகாடோஸ், வாழைப்பழம், பீட்ரூட், டார்க் சாக்கலேட் ஆகியனவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். அதேபோல் கீரை வகைகள், வால்நட், பாதாம், ஆலிவ் எண்ணெய் ஆகியனவற்றையும் உட்கொள்ளுங்கள்.


சிறுசிறு பிரேக் முக்கியம்:


சிறுசிறு பிரேக் உடலுக்கு ரொம்பவே முக்கியம். அதுதான் நம் செயல்திறனை அதிகரிக்கும். அதனால் வேலைக்கு இடையே ஒரு குட்டி பிரேக் எடுத்து மூளையை சுறுசுறுப்படையச் செய்யுங்கள். ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் 10 முதல் 15 நிமிட இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் செயல்திறனை அதிகரிக்கும்.


யோகா, தியானம் செய்யலாம்


நம் மூளைத்திறனை அதிகரிக்க அன்றாடம் யோகா, தியானம் எல்லாம் செய்யலாம். இதனால் மன அழுத்தம் தீரும். மூட் ஸ்விங்ஸ் போன்ற பாதிப்புகள் ஏற்படாது. அதனால் யோகா, தியானம் போன்ற கலைகளைப் பழகலாம்.


கவனச்சிதறலைக் குறைக்க வேண்டும்:


அடிக்கடி சமூகவலைதளம் பக்கம் செல்லுதல், இமெயில், வாட்ஸ் அப் செக் செய்தல் போன்ற கவனச்சிதறல்களைக் கட்டுப்படுத்துங்கள் இது உங்கள் செயல்திறனை நிச்சயமாக அதிகரிக்கும். பணியின்போது அந்தச் சூழல் அமைதியாக இருப்பதை உறுதி செய்யுங்கள். அது உங்கள் கவனத்தை அதிகரிக்க உதவும்.