முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆசியக்கோப்பை தொடருக்கு இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாது என்ற நிலைப்பாட்டில், பிசிசிஐக்கு வலுவாக ஆதரவளித்துள்ளார்.


2023 ஆசியக்கோப்பை


இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால அரசியல் பதற்றத்திற்கு மத்தியில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) வலுவான அறிக்கைகள் இருந்தபோதிலும், 2023-ஆம் ஆண்டு போட்டியை பாகிஸ்தான் நடத்துகிறதா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்த சர்ச்சையில், முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பிசிசிஐ நிலைப்பாட்டிற்கு வலுவாக ஆதரவளித்த நிலையில், இரு நாட்டு மூத்த கிரிக்கெட் வீரர்கள் தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.



ஹர்பஜன் கருத்து


ANI இடம் பேசிய ஹர்பஜன் இந்த கருத்தை கூறியுள்ளார். ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பைக்காக பாகிஸ்தானுக்கு செல்லக்கூடாது என்று கருத்து தெரிவித்த அவர், தங்கள் சொந்த மக்களுக்கே பாதுகாப்பு தரமுடியாத நாட்டிற்கு நம் நாட்டு வீரர்களை எப்படி அனுப்புவது என்பது குறித்து கேள்வி எழுப்பினார். அவர், "பாகிஸ்தானில் இந்தியா பாதுகாப்பாக இல்லை என்பதால், அங்கு பயணம் செய்யக்கூடாது, அந்த நாட்டின் சொந்த மக்களே தங்கள் நாட்டில் பாதுகாப்பாக உணராதபோது நாங்கள் ஏன் பயணம் செய்யவேண்டும்?", என்றார்.


தொடர்புடைய செய்திகள்: Russia Ukraine Crisis: கைது செய்யப்படுவாரா ரஷிய அதிபர் புதின்? உக்ரைன் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிப்பு..!


போட்டி நடக்குமிடம் குறித்த சர்ச்சை


ஆசியக் கோப்பை போட்டி குறித்த இந்த சர்ச்சை கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கியது, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும் பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா, போட்டிக்காக இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்லாது என்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார், மேலும் இடத்தை மாற்றுமாறு வலியுறுத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) பதிலடி கொடுத்தது, பாகிஸ்தானுக்கு ஹோஸ்டிங் உரிமை மறுக்கப்பட்டால் 2023 ஒருநாள் உலகக் கோப்பையை புறக்கணிப்போம் என்று மிரட்டல் விடுத்தது.



இந்த வார இறுதியில் முடிவு வரும்


கடந்த மாதம் பஹ்ரைனில் நடந்த ACC கூட்டத்தில், இந்த விவகாரம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், 2023 ஆசிய கோப்பைக்கான மாற்று இடமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உருவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இருப்பினும் இந்த நிகழ்விற்கான ஹோஸ்டிங் உரிமையை பாகிஸ்தான் தக்க வைத்துக் கொள்ளும் என்று தெரிகிறது. இந்த வார இறுதியில் துபாயில் நடைபெறும் ஐசிசி வாரியக் கூட்டத்தில் ஆசிய கோப்பை போட்டி குறித்த இந்த சர்ச்சை முடிவுக்கு வர வாய்ப்புள்ளது.


"எங்களிடம் சிக்கல்கள் உள்ளன, ஆனால் நான் ஏசிசி (ஆசிய கிரிக்கெட் கவுன்சில்) மற்றும் ஐசிசி கூட்டங்களுக்குச் செல்லும் போது, எங்களுக்காக எல்லா விருப்பங்களையும் திறந்து வைத்துள்ளேன், நாங்கள் இப்போது தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்" என்று பிசிபி தலைவர் நஜாம் சேத்தி கூறியுள்ளார்.