தனது சமீபத்திய நெட்ஃபிளிக்ஸ் தொடரான ராணா நாயுடுவின் ப்ரோமோஷன் நேர்காணலில் ராணா அவருடைய உடலில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளன என்பது குறித்து பேசியுள்ளார்.
ராணா நாயுடு
பாகுபலி புகழ் ராணா டகுபதி நடிப்பில் சமீபத்தில் ராணா நாயுடு என்னும் OTT சீரிஸ் வெளியாகி உள்ளது. க்ரைம் ட்ராமாவான இந்த திரைப்படத்தில் அவரது உறவினரான வெங்கடேஷ் டகுபதியும் நடித்துள்ளார். நெட்ஃபிளிக்ஸ் தொடராக வெளியாகியுள்ள ராணா நாயுடு அமெரிக்க க்ரைம் டிராமா சீரிசான 'ரே டோனோவன்'இன் அதிகாரப்பூர்வ தழுவலாகும். இந்த சீரிஸின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் ராணா தொடர்ந்து பங்குகொண்டு வருகிறார். அதில் ஒரு ப்ரோமோஷன் நேர்காணலின் போது, ராணா பார்வை குறைபாட்டால் அவதிப்படுவதைப் பற்றியும் தனது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பற்றியும் கூறினார்.
டெர்மினேட்டர்போல உணர்கிறேன்
தி பாம்பே ஜர்னிக்கு அளித்த பேட்டியில், ராணா டகுபதி தனது உடல்நலம் குறித்து மனம் திறந்து பேசினார். கார்னியல் மற்றும் சிறுநீரகம் ஆகிய 2 மாற்று அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு, அவர் ஒரு 'டெர்மினேட்டர்' போல் உணர்கிறார் என்றும் அவர் கூறினார். "நான் இன்னும் பிழைத்துக்கொண்டிருக்கிறேன், என்பதே பெரிய உத்வேகம். இன்னும் தொடர்ந்து செல்ல வேண்டும்" என்று நடிகர் பேட்டியின்போது கூறினார்.
சரி செய்தாலும்..
ராணா டகுபதிக்கு கண்ணில் உள்ள குறைபாடு என்னவென்றால், வலது கண் மூலம் அவரால் பார்க்க முடியாது. மேலும் அவரது இளம் வயதில் அவருக்கு கார்னியல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. "உடல் பிரச்சனை காரணமாக பலர் உடைந்து போகலாம், அது சரி செய்யப்பட்டாலும், ஒரு குறிப்பிட்ட கனம் மனதில் இன்னும் இருக்கும்" என்று ராணா அதே பேட்டியின்போது கூறினார்.
மரணிக்கும் வாய்ப்பு கூட இருந்தது
ராணா டகுபதி, தன்னால் முடிந்தவரை தைரியமாக இருப்பதால், கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்வது குறித்து வெளிப்படையாக பேசினார். 2022-ஆம் ஆண்டில், சமந்தாவுடனான நேர்காணல் நிகழ்ச்சியான சாம் ஜாம் நிகழ்ச்சியில், ராணா பேசுகையில், "வாழ்க்கை வேகமாக முன்னேறிக்கொண்டிருந்தபோது, திடீரென ஸ்டாப் பட்டன் அழுத்தியதுபோல இருந்தது. இதயத்தைச் சுற்றி பிபி, கால்சிஃபிகேஷன் இருந்தது, சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டன... பக்கவாதம் அல்லது ரத்தக்கசிவு ஏற்படுவதற்கான 70 சதவீதம் வாய்ப்பு இருந்தது. அதுமட்டுமில்லை, 30 சதவீதம் நேரடியாக மரணம் ஏற்படும் வாய்ப்பு கூட இருந்தது", என்று கூறி இருந்தார். ஆனால் அவற்றையோ குறித்து தற்போதுதான் முதன் முறையாக விரிவாக பேசியுள்ளார்.