செப்டம்பர் மாதம் செப்டம்பர்; மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்;
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்
துன்பம் தொலைந்தது எப்போ?
காதல் பிறந்ததே அப்போ!
இன்பம் தொலைந்தது எப்போ?
கல்யாணம் முடிந்ததே அப்போ!


என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
செல்லச் சண்டை போடுகிறாய்
தள்ளி நின்று தேடுகிறாய்
ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும் புன்னகையால் மன்னிக்கவும்
உனக்கு உரிமை இல்லையா?


திருமணமான இளம் தம்பதிகள் பலரும் இன்வேரியபிளாக வைக்கும் ரிங்டோன்களில் பிரதான இடம்பெறுவது இவைதான். ஆனால் எந்தப் பிரச்சினையும் தீர்க்க முடியாதது அல்ல. ஆகையால் கணவன் மனைவி உறவு சிறக்க இந்த 6 டிப்ஸ் பின்பற்றுங்கள் என்று கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள். இதோ உங்களுக்காக அதைப் பட்டியலிடுகிறோம்.


பேசித் தீர்க்கலாமே...


பிரச்சினை வராத கணவன் மனைவி இருக்க முடியாது. அப்படி பிரச்சினை வரும்போது இருவரும் ஒருவொருக்கொருவர் அமர்ந்து பேசுங்கள். அப்படிப் பேசி உங்களுக்கு இடையே இருக்கும் பிரச்சினையின் மையப் புள்ளியை அறிய முற்படுங்கள். அதைவிடுத்து ஒருவருக்கொருவர் பரஸ்பரம் குற்றம் தேடாதீர்கள். உரையாடல் வெளிப்படையாக இருந்தால் உள்ளங்கையில் தீர்வு கிட்டும்.


பழைய தவறுகளைக் கிளறாதீர்கள்


தவறு செய்யாத மனிதர்கள் இருக்கவே முடியாது. அப்படியிருக்க பழைய தவறுகளை குப்பையைக் கிளறுவதைப் போல் கிளறாதீர்கள். பழைய குறைகளை மனத்தில் வைத்துக் கொண்டு திரியாதீர்கள். அது உங்கள் உறவை சிதைத்துவிடும். முடிந்தது முடிந்து போயிற்று. எனவே, அதிலிருந்து கற்க வேண்டியதை கற்றுக் கொண்டு சுமூகமான மகிழ்வான வாழ்க்கையை முன்னெடுங்கள்.


ஐவிரலும் ஒன்றல்ல..


எப்போதுமே காதலிலோ திருமணத்திலோ சம்பந்தப்பட்ட இருவரும் மனமுதிர்ச்சி உடையவராக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஒருவர் குழந்தையைப் போல் இருக்கலாம். ஒருவர் மனப்பக்குவம் கொண்டவராக இருக்கலாம். அதனால் மனம் முதிர்ச்சி பெற்ற நபர் மற்றவரிடம் பிரச்சினையை புரிய வைக்கலாம். என்ன செய்தும் புரிய வைக்க முடியவில்லை என்று தெரிய வரும்போது ஒன்று நீங்கள் அதிலிருந்து வெளியேறலாம், அல்லது அந்த ஒரு விசயத்தை தவிர்த்துவிட்டு உங்கள் மண வாழ்க்கையின் பிற நல்ல அம்சங்களோடு வாழலாம்.


சுயத்தை இழக்கக் கூடாது


இணையர் என்றால் உங்களுக்கு இணையானவர். இதில் யாரும் யாரைவிட உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ இல்லை. ஆகையால் உங்களுடைய சுயத்தை ஒருபோதும் இழக்காதீர்கள். தனிப்பட்ட சுதந்திரம், மகிழ்ச்சி, இடைவெளி, எல்லைகள், நேரம் என எல்லாமே இருக்கிறது. அதற்கு மதிப்பு கொடுங்கள். அவர்களை அவர்களின் போக்கில் அவர்களாகவும், நீங்கள் உங்களின் போக்கில் நீங்களாகவும் வாழ்வதே நல்ல காதல். அப்படி, அவரின் சுதந்திரத்தால் உங்களுக்கு இன்செக்யூரிட்டி ஏற்படுகிறது என்றால் நீங்கள்தான் மாற வேண்டும் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.


உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்


விவாதத்தின் போது உங்களுக்காக மட்டும் நீங்கள் பேசினால் போதுமானது. நீங்கள் என்ன உணர்கிறீர்கள், உங்களை பற்றிய நியாயம் என்ன என்பதை மட்டும் விளக்கினால் போதுமானது. உங்கள் இணையரை பற்றி பேசுவதோ அல்லது அவர்கள் என்ன உணர்கிறார்கள் என்று விளக்க முற்பட்டாலோ அது தவறாக முடியலாம். எனவே, சுமூகமான உறவை மேற்கொள்ள உங்களுக்காக நீங்கள் பேசுங்கள் போதும். தவிர்க்க முடியாத சூழலில் உங்கள் இணையருக்கு பேச நீங்கள் தேவை என்று வரும்போது மட்டும் அவருடைய அனுமதியோடு அதை செய்யுங்கள்.


பாரத்தை சுமத்தக் கூடாது:


ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் பயம், மனஅழுத்தம் , ஏமாற்றம் என பல்வேறு பிரச்சினைகளும் இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் இணையரின் செய்லகளால் தான் என்று கூறி அவர்கள் மீது பாரத்தை சுமத்துவதோ அல்லது பொறுப்பேற்றுக்கொள்ள சொல்வதோ கூடாது. இருப்பினும், நீங்கள் அவற்றை தனியாக சமாளிக்க முடியாமல் தவிக்கும்போது அவர்களின் உதவியை நாடலாம். அதை விட்டு, அவர்களின் மீது பாரத்தை சுமத்துவதால் உங்கள் உறவின் சுமை கூடி அது முறிந்து போகலாம்.