கொரோனா ஆடும் கோரத்தாண்டவத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. நிறுவனங்கள் முடிந்தவரை ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதிக்க வேண்டுமென அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இணையவழியில் வேலை செய்ய ஏதுவான ஊழியர்கள் பலர் வீட்டில் இருந்தே வேலை பார்த்து வருகின்றனர். கடந்த வருடம் தொடங்கிய வொர்க் ஃப்ரம் ஹோம் பலருக்கு இன்றும் நீடித்து வருகிறது. வழக்கமாக அலுவலகம் சென்று வேலை பார்ப்பதற்கும், வீட்டில் இருந்த படியே அலுவலக வேலை பார்ப்பதற்கும் பல வித்தியாசங்கள் உண்டு. 




அலுவக சூழலில்  இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருந்தாலும் சில நேரங்களில் வொர்க் ப்ரம் ஹோம் ஊழியர்களுக்கு ஈசியானதாகவே இருக்கிறது.  குறிப்பாக வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என்பதால் பெருந்தொற்று காலத்தில் அது பாதுகாப்பை உறுதி செய்வதாக ஊழியர்கள் நினைக்கின்றனர். அதனால் சில்லறை சிக்கல்கள் நிறைய இருந்தாலும் பலர் வீட்டில் இருந்தே வேலை பார்க்கவே விரும்புகின்றனர். இது குறித்து ஒரு புள்ளிவிவரத்தை FlexJobs என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. 


அந்த புள்ளிவிவரத்தின் சாராம்சம் என்னவென்றால், தொடர்ந்து வீட்டில் இருந்தே வேலை பார்க்க ஊழியர்கள் விரும்புகின்றனர். கண்டிப்பாக அலுவலகம் வர வேண்டும் என்று தெரிவித்தால் தாங்கள் வேலையை விட்டுவிடுவோம் என 58% ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அந்த புள்ளிவிவரம் குறிப்பிட்டுள்ள மேலும் சில தகவல்களை பார்ப்போம். அமெரிக்காவை பொருத்தவரை பலர் அங்கு தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர். இதனால் பல நிறுவனங்கள் வீட்டில் இருந்தே வேலை என்ற நடைமுறையை மாற்றி ஊழியர்களை அலுவலகம் வருமாறு நிர்பந்திக்கிறது.




அலுவலகம் வந்துதான் ஆக வேண்டும் எனக் கூறினால் என்ன செய்வீர்கள் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு 58% பேர் வேலையை விட்டுவிடுவேன் என தெரிவித்துள்ளனர்.


இதற்கு ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு மனப்பான்மையே இருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த புள்ளிவிவரத்திற்காக சுமார் 2100 ஊழியர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் சுமார் 65% ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலையை தொடர வேண்டுமென தெரிவித்துள்ளனர். 33% வாரத்திற்கு சில நாட்கள் அலுவலகம் செல்லலாம் என குறிப்பிட்டுள்ளனர். மீதமுள்ள 2% மட்டுமே வழக்கம்போல் அலுவலகம் செல்லலாம் என கூறியுள்ளனர்.




இந்த ஆய்வில் பதிலளித்த ஊழியர்களில் 72% பேர் அமெரிக்காவையும், 4% கனடாவையும், 24% மற்ற உலக நாடுகளையும் சேர்ந்தவர்கள். குறிப்பாக 74% பேர் பெண்கள்.


வேலையே வேண்டாம்:


வேறு வழியே இல்லை, அலுவலகம் வந்துதான் ஆக வேண்டும் எனக் கூறினால் என்ன செய்வீர்கள் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு 58% பேர் வேலையை விட்டுவிடுவேன் என தெரிவித்துள்ளனர். என்னசெய்வேன் என்று  தெரியவில்லை என குழப்பமாக இருப்பதாக 31% பேர் தெரிவித்துள்ளனர்.  வீட்டில் இருந்து வேலை என்பது அவ்வளவு பெரிய விஷயம் இல்லை 11% பேர் தெரிவித்துள்ளனர். 


என்னதான் இருக்கு வொர்க் ப்ரம் ஹோமில்?


நீங்கள் ஏன் வீட்டில் இருந்து வேலை பார்க்க அடம் பிடிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு 49% பேர் கொரோனாவுக்கு பயந்து தான் என பதில் அளித்துள்ளனர். வெளியே செல்வதே வைரஸ் மீதான பயத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். 46% பேர் அலுவலகம் ஒரு இறுக்கமான இடம் என்றும், வீட்டில் இருந்து வேலை என்றால் கொஞ்சம் ரிலாக்சாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மீதமுள்ளவர்களுக்கு குழப்பமே நீடிக்கிறது.




வொர்க் ப்ரம் ஹோம் - சிக்கல் என்ன?


வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதில் என்ன சிக்கல் உள்ளது என்ற கேள்விக்கு, அலுவகமாக இருந்தால் வேலையை முடித்துக்கொண்டு கிளம்பிவிடலாம், இங்கு வேலை நீண்டு கொண்டே இருப்பதாக 35% பேர் தெரிவித்துள்ளனர். 28% பேருக்கு வீட்டு பிரச்னைகள் போன்ற வேறு இடையூறுகள் வருதாகவும், 28% பேருக்கு இண்டர்நெட் போன்ற டென்னிக்கல் பிரச்னை தலைவலியை உண்டாக்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.




Work From Home Tips | ஆரோக்கியத்தில் கவனம்.. வொர்க் ஃப்ரம் ஹோம் ஊழியர்கள் கவனிக்க வேண்டியது என்ன?