நடைப்பயிற்சி என்பது சாதாரணமாக தெரியலாம் . ஆனால் ஒருவர் நடக்கும் பொழுது அவரின் தலை முதல் பாதம் வரை அனைத்து பகுதிகளுக்குமே பலன் உண்டு. நடிகை குஷ்பு கூட தனது எடை இழப்பிற்கு முக்கிய காரணம் நடைப்பயிற்சிதான் என கூறியிருந்தார். தினமும் நடப்பது  சருமத்தை இறுக்கமாக்கும், எடை இழப்புக்கு உதவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், ஆற்றல் மட்டங்களை அதிகரிக்கும். இவை அனைத்துமே உங்களை இளமையுடன் வைத்திருக்க உதவும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.


வேகத்தை மாற்றி நடக்க வேண்டும் :


நீங்கள் நடைப்பயிற்சி செய்யும்பொழுது மெதுவாக நடக்கக்கூடாது. முதலில்  மிதமான வேகத்தில் நடந்து செல்லுங்கள் . பின்னர் வேகத்தை அதிகரிக்க வேண்டும். இப்படியாக மாறி மாறி நடக்கும் பொழுது உடல் சோதனைக்கு உட்படுத்தப்படும், இதயத் துடிப்பு உயரும் , உடலின் கலோரிகள் குறையும். வழக்கமான நடைப்பயிற்சிக்கு இடையில் 20 வினாடிகள் வேகத்தை அதிகரித்து குறைத்துக்கொள்ளுங்கள் . இது எல்லாவற்றிற்கும் மேலாக உங்களது உடல் கூறுவதை கேட்டு வேகத்தை கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள்.







சவால் முக்கியம் :


நடைப்பயிற்சி என்பது பலருக்கு சாதாரண ஒரு விஷயமாக இருக்கலாம் . எனவே உங்களை நீங்களே சேலஞ்ச் செய்துக்கொள்ள வேண்டியது அவசியம் . நடக்கும் பொழுது சிறிய எடைகளை சுமந்துகொண்டு அல்லது கணுக்கால் எடையை அணிந்துகொண்டு நடப்பது சிறப்பானது.போதுமான சவாலாக இல்லாத ஒரு வொர்க்அவுட்டைச் செய்வது மதிப்புக்குரியது அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்!


மாடிப்படிகளில் நடக்கலாம் :


நாம் ஷாப்பிங் செல்வதற்கோ அல்லது வீட்டிற்கு செல்வதற்கோ பெரும்பாலும் லிஃப்ட் அல்லது எஸ்கலேட்டர்களைத்தானே பயன்படுத்துகிறோம் , அதற்கு மாற்றாக படிக்கட்டுகளை எப்போதுமே பயன்படுத்துங்கள் . எஸ்கலேட்டர்கள் அல்லது லிஃப்ட்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, முடிந்தவரை படிக்கட்டுகளில் செல்வது உடலுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதே போல உங்களது காரை அலுவலகம் அல்லது வீட்டிற்கு அருகிலேயே நிறுத்தாமல்  தூரத்தில் நிறுத்துவது தினசரி வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும்போது அதிக நடக்க வாய்ப்பு கிடைக்கும்.


ஒரு நாளைக்கு இரண்டு முறை :


ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் நடக்க வேண்டியது அவசியம் . காலை 10 நிமிடங்கள் மற்றும் மதியம் உணவு சாப்பிடுவதற்கு முன் 10 நிமிடங்கள் என வழக்கமாக்கிக்கொண்டால் அது உடலை இளமையாக வைத்திருக்க உதவும். சாப்பிட்ட பிறகு லேசான நடைபயிற்சி உடலின் இன்சுலின் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். 




செல்லப்பிராணிகளை அழைத்துச்செல்லுங்கள் :


பலரும் வாக்கிங் செல்லும் பொழுது நாய்க்குட்டிகளை அழைத்து செல்வதை பார்த்திருப்போம். அது சிலருக்கு பாதுகாப்பாகவும் , கம்பெனியாகவும் இருக்கலாம் . ஆனால் உண்மையில் நாய்க்குட்டிகளை வாக்கிங் செல்லும்பொழுது அழைத்துச்சென்றால் கூடுதல் சவாலானதாக இருக்கும். உங்கள் நாய் உங்களை இங்கும் அங்கும்  ஓடுவதால் , உங்கள் இதயத் துடிப்பை அதிகரித்து, உங்கள் மனநிலையை மேம்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.