உலகம் முழுவதும் மூன்றே நாள்களில் 200 கோடி வசூலை வாரிக்குவித்து பொன்னியின் செல்வன் படம் சாதனை புரிந்துள்ள நிலையில், இரண்டாம் பாகத்தை சம்மர் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய மணிரத்னம் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கியுள்ள பிரம்மாண்ட திரைப்படமாக பொன்னியின் செல்வன் படம் செப்டெம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.


 






தமிழ் சினிமா ரசிகர்களின் எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் பெரும் நட்சத்திரப் பட்டாளத்தின் நடிப்பில் படம் வெளியாகியுள்ள நிலையில், நாவலின் பல ஆண்டு கால ரசிகர்கள், முதியவர்கள், இளம் தலைமுறையினர் என அனைவரிடம் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


பான் இந்தியா படமாக பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், படம் இந்தி, தெலுங்கு வட்டாரங்களில் மெதுவாக பிக் அப் ஆகி மூன்றாம் நாளான நேற்றைய நாள் முடிவில் நல்ல வசூலைக் குவித்துள்ளது.


 






ஒட்டுமொத்தமாக 3 நாள்களில் 200 கோடிக்கும் அதிகமான வசூலை பொன்னியின் செல்வன் குவித்துள்ள நிலையில், அதன் அடுத்த பாகத்தை மணிரத்னம் விரைந்து வெளியிட திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.


பெரும் நட்சத்திரப் பட்டாளத்தை படம் கொண்டிருக்கும் நிலையில், நடிகர்களின் கால்ஷீட் பிரச்னை உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு மணிரத்னம் முன்கூட்டியே படத்தை எடுத்து முடித்து விட்டார். இதனால் எடிட்டிங், இசை உள்ளிட்டவற்றில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டியுள்ள நிலையில், அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும், படம் சம்மர் ரிலீசாக வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


படத்தின் இரண்டு பாகங்களையும் சேர்த்து மொத்தம் 120 நாள்களில் மணிரத்னம் எடுத்து முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.   மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.