உடல் உறுப்புகளிலேயே கல்லீரலின் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. ரத்தத்தில் இருக்கும் நச்சுக்கள், கழிவுகள் ஆகிவயற்றை நீக்குவது; உணவு செரிமானத்திற்கு பிறகு உறிஞ்சிக் கொண்ட சத்துகளை உடல் முழுவதும் ரத்தத்தில் கலக்கும் பணி உள்ளிட்டவற்றை அயராது செய்து வருவதும் கல்லீரல் தான். உடலின் பிற உறுப்புகளை விட, அதிகளவிலான வேலைகளைச் செய்வதும் கல்லீரல் என்று மருத்துவ உலகம் தெரிவிக்கிறது.
கல்லீரல்:
தற்போது வரை, கல்லீரலின் மொத்த பயன்களாக 500 பயன்கள் பட்டியலிடப்படுகின்றன. நாம் உண்பது உணவு, மது, விஷம் என எதுவாக இருந்தாலும் அதன் மீது செயலாற்றுவது கல்லீரலின் முதன்மைப் பணி. எனவே நாம் உண்ணும் நச்சுப் பொருள்கள் அனைத்துமே கல்லீரலால் உறிஞ்சிக் கொள்ளப்படுகின்றன. மேலும் ரத்தத்தில் ஏற்படும் தொற்றுகளும் கல்லீரலைப் பாதிக்கின்றன.
கல்லீரலின் செயல்பாடுகள் பாதிகப்படும்போது, உடலில் அதன் விளைவுகளை காண முடியும். நாள் முழுவதும் சோர்வாக உணர்வது, கடுப்பான உணர்வு போன்றவை ஏற்பட்டால் கல்லீரலில் கொழுப்பு அதிகரித்துள்ளது காரணமாக இருக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கல்லீரல் ஆரோக்கியத்துடன் செயல்படவில்லையெனில் உடல்நிலை மட்டுமல்ல, மனநல ஆரோக்கியமும் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லீரலில் கொழுப்பா?
நினைவாற்றல் குறைவது, கவனச்சிதறல், சரியான தூக்கமின்மை ஆகியன கல்லீரல் ஆரோக்கியமின்மையின் அறிகுறிகளாகும். நாளடைவில், இது இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட காரணமாகிவிடும். ஆரோக்கியமில்லா வாழ்வியல் முறைகளே கல்லீரல் செயல்பாடு பாதிக்கப்படுவதற்கு காரணமாகும்.
ஆல்கஹால்-இல்லாத கல்லீரல் கொழுப்பு நோய் (Non-alcoholic fatty liver disease (NAFLD))- அதாவது மது அருந்தாமல் இருந்தும் வேறு காரணங்களுக்காக கல்லீரலில் கொழுப்பு அதிகரித்துவிடும். கடந்த சில ஆண்டுகளாக, வயது வித்தியாசமின்றி பலருக்கும் கல்லீரலில் கொழுப்பு அதிகரிக்கும் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர்.
உடலில் நச்சுக்களை நீக்கும் செயலில் ஈடுபடும் கல்லீரலுக்கு ஏற்படும் பாதிப்பு அவ்வளவு எளிதாக வெளியே தெரியாது என்கின்றனர் மருத்துவர்கள். அதாவது, கல்லீரல் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து ஆரம்ப கால கட்டத்தில் எந்த அறிகுறிகளையும் கண்டறிய முடியாது. இதனால், கல்லீரல் நோய் முற்றிய நிலையில் தான் பலரும் இத்தகைய பாதிப்பு இருப்பதையே தெரிந்து கொள்ள முடிகிறது.
காலையில் எல்லாரும் சுறுசுறுப்பாக, புத்துணர்ச்சியோடு கண்விழிப்பதில்லை. பலருக்கும் கொஞ்ச நேரம் சோர்வாக இருக்கும். காலை சோர்வு என்பது எழுந்த பின் நீண்ட நேரம் சோம்பலாக இருப்பது போன்ற உணர்வு, தீவிர உடல்சோர்வு மற்றும் நிறைய நேரம் ஓய்வெடுத்தாலும் நீடிக்கும் சோர்வு ஆகியவை கல்லீரலில் சேர்ந்துள்ள அதிகளவு கொழுப்பு காரணமாக இருக்கலாம். காலையில் சோர்வு என்பது பல நோய்களுடன் தொடர்புடையது என்றாலும், அது கல்லீரல் நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.உடல் ரீதியான சோர்வு, மனநிலை மாற்றம் மற்றும் எரிச்சலையும் ஏற்படுத்தும். கல்லீரல் ஆரோக்கியத்துடன் இல்லை என்றால் மனநலன் பாதிக்கப்படுவதோடு, உடல் பருமன் அதிகரிக்கவும் செய்யும்.
என்னென்ன பாதிப்புகள்:
கல்லீரலில் அதிகரிக்கும் கொழுப்பு காரணமாக ஹார்மோன்கள் சுரப்பு சீரின்மை ஏற்படும். இது மனநலனையும் பாதிக்கும். மன அழுத்தம் ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
நினைவாற்றல் குறையும். எதையும் சீராக கவனத்துடன் செய்ய முடியாது. ஒரு விசயத்தில் கவனம் செலுத்தும் திறன் குறைந்துவிடும்.
புத்துணர்ச்சியுடன், சுறுசுறுப்புடன் செயல்பட கல்லீரல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். கல்லீரலில் கொழுப்பு அதிகரித்தால் சோர்வு உணர்வு அதிகரிக்கும்.
கல்லீரல் ஆரோக்கியத்திற்கு கவனிக்க வேண்டியவை
மதிய, இரவு உணவுகளில் 50 சதவீத காய்கறிகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
சிறுதானிய உணவு வகைகள் உடல் நலனிற்கு நல்லது.
காலை எழுந்ததும் மிதமான சூட்டில் எழுமிச்சை சாறு கலந்த தண்ணீர் அருந்தலாம்.
நார்ச்சத்து அதிகமுள்ள உணவு வகைகள் டயட் லிஸ்டில் இருக்கட்டும்.
பேக்கரி உணவுகளை தவிர்க்கவும்.
உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்க பழக வேண்டும்.
கல்லீரலில் கொழுப்பு சேர்வதன் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் தொடர்ந்து கல்லீரலின் இயக்கத்தையே நிறுத்தக்கூடியது. அதிகளவில் மது அருந்துவது, உடல் பருமன் கொண்டோர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ஆகியோருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
கல்லீரல் நோய் என்பதன் வளர்ச்சி மிகவும் மெதுவாக நடைபெறும் ஒன்று என்பதால் வாழ்க்கை முறைகளை ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் மூலமாக மாற்றுவது மட்டுமே கல்லீரல் பாதிப்புகள் பெருகாமல் தவிர்க்கும். ஆரோக்கியமான காலை உணவை ஊன்பது, உப்பு, கொழுப்பு உட்கொள்வதைக் குறைத்துக் கொள்வது, அதிகளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது, அதிகளவில் நீர்ச்சத்து எடுத்துக் கொள்வது, அதிக மது அருந்தாமல் இருப்பது, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது ஆகியவற்றின் மூலம் கல்லீரல் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும்