புதுச்சேரி: ஜெர்மன் நாட்டை சேர்ந்த 20 வயது இளம்பெண், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா கோணமங்கலம் கிராமத்தில் தங்கியிருந்து சமூக பணியாற்றி வருகிறார். இவர், புதுவையில் இருந்து பெங்களூருக்கு தனியார் சொகுசு பேருந்தில் சென்றார். நள்ளிரவில் பஸ்சில் அவருக்காக ஒதுக்கிய படுக்கையில் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்த அவரை, பக்கத்து சீட்டில் இருந்த வாலிபர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி செய்தார். இதனால் திடுக்கிட்டு எழுந்த அவர் கூச்சலிட்டார். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டு, வெளிநாட்டு பெண்ணிடம் விசாரித்தார்.
ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை:
அப்போது பக்கத்து இருக்கையில் இருந்த வாலிபர் தன்னை பாலியல் தொல்லை செய்ய முன்றதாக கூறினார். இதையடுத்து அந்த வாலிபருக்கு பயணிகள் தர்மஅடி கொடுத்து பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட்டனர். தொடர்ந்து அந்த பெண் அதே பேருந்தில் பெங்களூரு சென்றார். பின்னர் புதுச்சேரி திரும்பிய அவர், பேருந்தில் நடந்த சம்பவம் குறித்து உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் பாபுஜி வழக்குப்பதிவு செய்து அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பட்டியலை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஒரு பெண்ணின் செல்போன் எண் மூலம் அந்த டிக்கெட் பதிவு செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தியதில், பெங்களூரு பாவனி நகர் ஓசூர் மெயின் ரோட்டை சேர்ந்த கல்லூரி மாணவரும், ஆக்கி விளையாட்டு வீரருமான சரத் (வயது 22) என்பவர் தனது காதலியுடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துவிட்டு, அந்த பஸ்சில் பயணம் செய்தது தெரியவந்தது.
ஹாக்கி வீரர் கைது:
உடனே போலீசார் சரத்தை கைது செய்து புதுவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சரத் அந்த பஸ்சில் ஏறிய பிறகு தான் ஜெர்மன் பெண் ஏறியுள்ளார். சரத், காதலியுடன் இருக்கும்போதே அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளார். அந்த பெண்ணும் முதலில் சகஜமாக பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் சரத்தின் பேச்சு எல்லை மீறியதால் அந்த பெண் அவரிடம் பேசுவதை தவிரித்துள்ளார்.
நள்ளிரவில் பஸ் திண்டிவனம் பகுதியில் சென்றபோது, பயணிகள் அனைவரும் தூங்கிவிட்டனர். பக்கத்து இருக்கையில் இருந்த சரத்தின் காதலியும் அயர்ந்து தூங்கிவிட்டார். இந்த நிலையில் தனது படுக்கையில் இருந்து இறங்கிய சரத், ஜெர்மன் பெண்ணின் படுக்கையில் ஏறி, அவரை பாலியல் தொல்லை செய்ய முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட சரத்தை போலீசார் புதுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.