நான்ஸ்டிக் பேன் விளம்பரங்கள் வந்தபோது தூக்கி எறியுங்கள் உங்கள் பழைய எவர்சில்வர் பாத்திரங்களை என்றுதான் விளம்பரப்படுத்தினார்கள். ஆனால் எவர்சில்வர் பாத்திரங்களின் ஆயுட்காலத்தை ஒப்பிடும்போது உண்மையில் நான்ஸ்டிக் பேன்களின் நிலைதான் சீக்கிரமே தூக்கி எறியும் பதத்திற்கு வந்துவிடுகிறது. சந்தையில் விற்கும் நான்ஸ்டிக் பேன்கள் ஏராளம். 200 ரூபாய் தொடங்கி 2000 ரூபாய் வரையிலான பேன்கள் உள்ளன. அவற்றைப் பராமரிப்பதுதான் உண்மையிலேயே பெரிய சவாலாக இருக்கிறது.
நான்ஸ்டிக் வாணலி, நான்ஸ்டிக் தோசைக்கல் என விதவிதமான டெஃப்லான் பூசப்பட்ட சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் டெஃப்லான் பூச்சால் உடல் ஆரோக்கியத்துக்கு அபாயங்கள் ஏற்படலாம் என விவாதிக்கப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க, இத்தகைய பாத்திரங்களின் வாழ்நாள் குறைவு என்பது மற்றொரு சிக்கல். இரும்பு, ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல் பாத்திரங்கள் காலங்காலமாக நீடிக்கக்கூடியவை. உடல் ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிக்காதவை.
இந்நிலையில் இந்திய கிச்சன்களில் உள்ள நான்ஸ்டிக் பேன்களை பராமரிக்க இதோ சில டிப்ஸ்:
1. எண்ணெய் தேய்த்து பயன்படுத்துங்கள்..
நான்ஸ்டிக் பேன்களை பயன்படுத்தும் முன்னர் அதன் மீது எண்ணெய் தேய்க்கவும். அவ்வாறு எண்ணெய்யை தேய்த்துவிடுவதால் அது கோட்டிங் போகாமல் பாதுகாக்கப்படுகிறது. நிறைய எண்ணெய்யை வாரி ஊற்ற வேண்டும் என்றில்லை. தோசைக்கல்லில் துணி கொண்டு எண்ணெய்யை தேய்த்து எடுப்பார்களே அந்த அளவுக்கு தேய்த்தால் போதுமானது. எண்ணெய், நெய், வெண்ணெய் என ஏதேனும் ஒன்று கொண்டு பேனை க்ரீஸ் செய்துவிட்டு பயன்படுத்தலாம்.
2.எவர்சில்வர் கரண்டிகள் பயன்படுத்தக் கூடாது:
நான்ஸ்டிக் பேன் விற்கும்போதே அத்துடன் உட்டன் ஸ்பேடுலா எனப்படும் மரக்கரண்டி தருவார்கள். ஆனால் நம்மில் பலரும் அதை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு நம் வீட்டில் உள்ள எவர்சில்வர் கரண்டிகளைப் பயன்படுத்துவோம். அவ்வாறு பயன்படுத்தினால் அது பேனில் உள்ள கோட்டிங்கை நீக்கிவிடும். அதனால் மரக் கரண்டி அல்லது சிலிகான் கரண்டிகளை மட்டுமே பயன்படுத்துவது பேனின் பயன்பாட்டுக் காலத்தை அதிகரிக்கும்.
3. மிதமான சூட்டில் சமைக்கவும்:
நான்ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்தி சமைக்கும்போது அடுப்பின் தீயை சிம்மில் வைத்து பயன்படுத்தலாம். இதனால் பாத்திரம் சீராக சூடேறும். இது நான்ஸ்டிக் பாத்திரத்தின் நிறம் மாறாமல் பாதுகாக்கும். மேலும் அதன் மீதுள்ள கோட்டிங் போகாமல் நீடித்து உழைக்கச் செய்யும்.
4. பேனை சுத்தம் செய்வதில் கவனம்..
நான்ஸ்டிக் பேனை சுத்தம் செய்வதில் கவனம் தேவை. பேனை பயன்படுத்தியவுடன் அதன் மீது உடனே குளிர்ந்த நீரை ஊற்றக் கூடாது. இது பேனில் தெர்மல் ஷாக் ஏற்படச் செய்யும். இதனால் பேனின் கோட்டிங் வெகு சீக்கிரமே போய்விடும். மாறாக அந்தப் பேன் குளிர்ந்துபோனவுடன் மிதமான ஸ்பாஞ்சு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பேனில் சிறிது பாத்திரம் கழுவும் திரவத்தை தண்ணீரில் கலந்து ஊற்றிவைத்துவிட்டு பின்னர் ஸ்பாஞ்ச் கொண்டு சுத்தம் செய்வது சரியான முறையாகும்.
5. பாதுகாப்பான இடத்தில் வைக்கவும்
சமைத்து சுத்தம் செய்த பின்னர் நான்ஸ்டிக் பாத்திரங்களை அதற்கென தனியான இடத்தில் வைக்கவும். அதன் மீது வேறு பாத்திரங்களை வைப்பது. அல்லது ஒரு நான்ஸ்டிக் பாத்திரம் மீது இன்னொன்றை வைப்பது போன்ற செயல்களைச் செய்யக் கூடாது.