பல் போனால் சொல் போயிற்று என்று ஒரு முதுமொழி உண்டு. ஏனென்றால் பற்களுக்கு இடையே தான் நாக்கானது,மேலும் கீழும் முன்னும் பின்னும் சுற்றி சுழண்டு, வார்த்தைகளை வெளிப்படுத்துகிறது. அந்த பற்கள் இல்லாமல் போகும்போது,வார்த்தைகள் சரியான அழுத்தத்துடன் உச்சரிக்கப்படாமல் வெளிவரும்.இதை நிறைய வயதான பல் இல்லாத நபர்களிடம்,நீங்கள் கண்டிருப்பீர்கள்.அவர்களின் வார்த்தைகள் தெளிவில்லாமல் இருக்கும். மற்றொருபுறம் பற்கள் இல்லாமல் போனால்,விருப்பப்பட்ட, சுவை மிகுந்த,மற்றும் கடினமான உணவுகளை நம்மால் கடித்து உண்ண முடியாமல் போகும்.ஆகவே பற்களில் ஏற்படும் பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்தி,நமது வாழ்நாள் முழுவதும் பற்களை பராமரித்து வந்தால் மட்டுமே, சொல்லும்,சுவையும் நம்மோடு நிலைத்திருக்கும்.


நாம் பேசும் சமயங்களில், வாயிலிருந்து துர்நாற்றம் வெளிப்பட்டால்,ஒன்று வயிற்றில் கசடுகள் தங்கி இருக்கிறது என்று அர்த்தம்.மற்றொன்று பற்களில் சுத்தம் இல்லாமல் இருக்கிறது என்று அர்த்தம்.இந்த பற்களில் உணவுகள் அரைக்கப்பட்டு, உள்ளே சென்றது போக,சிறு சிறு துணுக்குகள் வாயிலே ஒட்டிக் கொண்டிருக்கும்.


இவற்றை முறையாக சுத்தம் செய்யவில்லை என்றால்,இவை வாயிலேயே தங்கி, பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளின் பெருக்கத்திற்கு வழி வகுத்து,சொத்தை மற்றும் மாவு பொருட்கள் படிந்து,துர்நாற்றம் வீசுவது மற்றும் ஈறுகளில் வீக்கம் இருப்பது, என நிறைய பிரச்சனைகள் காணப்படும். இவற்றை சரி செய்வதற்காக சாப்பிட்டவுடன் நன்றாக தண்ணீர் விட்டு வாயை கொப்பளித்து, உணவு துணுக்குகள் பற்களில் ஒட்டிக் கொண்டிருக்காமல் சுத்தம் செய்ய வேண்டும்.


காலை மற்றும் இரவு படுப்பதற்கு முன் என இருவேளையும் பல் துலக்குங்கள். சரியான பற்பசை மற்றும் பிரஷ்ஷை தேர்ந்தெடுப்பதும் அவசியமாகும். ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்ற முதுமொழிக்கு ஏற்ப, பல்லை துலக்குவதற்கு, சரியான பற்பொடி அல்லது பற்பசையை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். இன்று இயற்கை பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பல்பொடி மற்றும் பற்பசைகள் கடைகளில் நிறைய கிடைக்கின்றன. இவற்றில் சரியான ஒன்றை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இதேபோல மிகவும் கடினமாகவோ அல்லது மிகவும் மெதுவாகவோ இருக்கும் பிரஷ்ஷுகளைப் பயன்படுத்தாமல், சரியானதன்மையில் பிரஷ்களை பயன்படுத்தி பற்களை சுத்தம் செய்ய வேண்டும்.


வளைந்த மற்றும் பற்களுக்கு இடையே இடைவெளி இருக்குமானால்,அவற்றிற்கு சிகிச்சை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.சிலருக்கு பல் அமைப்பில் சில பற்கள் வளைந்து காணப்படும்.சிலருக்கு பற்களில் இடைவெளி இருக்கும்.இந்த பிரச்சனை உள்ளவர்கள்,தகுந்த பற் சிகிச்சை நிபுணரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் வளைந்த மற்றும் இடைவெளி இருக்கும் பற்களில் உணவு துணுக்குகள் ஒட்டிக்கொண்டு, கிருமிகள் உற்பத்தியாகி, நாளடைவில் பற்சிதைவு மற்றும் சொத்தைப்பற்களை உண்டாக்கி விடும். ஆகவே உங்கள் முக பொலிவிற்காகவும்,வாயின் ஆரோக்கியத்திற்காகவும்,இத்தகைய இடைவெளி மற்றும் வளைந்த பற்களை சரி செய்து கொள்வது மிகவும் அவசியமாகும்.


பற்களுக்கும் எலும்புகளுக்கும் உறுதியளிக்கும் உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கொழுப்பு இல்லாத பால், தயிர்,சீஸ் மற்றும் சோயாமில்க் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்ளுங்கள்.பாஸ்பரஸ் நமது பற்களுக்கும் எலும்புகளுக்கும் தேவையான ஒன்றாகும் இது முட்டை, மீன்,  இறைச்சி, பால், மற்றும் பீன்ஸ் ஆகியவற்றில் காணப்படும் ஒரு கனிமமாகும்.


மேலும் வைட்டமின் சி, சிட்ரஸ் பழங்கள், தக்காளி, மிளகுத்தூள், ப்ரோக்கோலி, உருளைக்கிழங்கு மற்றும் கீரை ஆகியவை நிறைய எடுத்துக் கொள்ளுங்கள் இவையும் எலும்புகளுக்கும் பற்களுக்கும் தேவையாகும். இவ்வாறு நமது பற்களை பராமரித்துக் கொண்டு நமது சொல்லையும் சுவையையும் பாதுகாத்துக் கொள்வோம்.