22 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகல கொண்டாட்டத்துடன் இன்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் ஈகுவடார் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டியை நடத்திய கத்தார் அணி தோல்வியைச் சந்தித்தது.


தொடக்க நிகழ்ச்சிகள் இரவு சுமார் 7.30 மணி அளவில் தொடங்கியது. தென் கொரியாவைச் சேர்ந்த இசைக்குழுவினரின் நிகழ்ச்சிகளும், அமெரிக்காவைச் சேர்ந்த இசைக்குழுவினர், கொலம்பியா, நைஜீரியா,  உள்பட பல நாடுகளைச் சேர்ந்த பாப் பாடகர்களும் நிகழ்ச்சிகளை நடத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.


1982-ஆம் ஆண்டுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட உலகக் கோப்பை முதல் ஆட்டம் இதுதான்.
உலகக் கோப்பையில் முதல் முறையாக 2002 இல் அறிமுகமான செனகல், அப்போது நடப்பு சாம்பியனாக இருந்த பிரான்ஸை முதல் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 


முதல் ஆட்டம்
தரவரிசையில் 50-ஆவது இடத்தில் உள்ள கத்தார் அணி முதல் முறையாக உலகக் கோப்பையில் தடம் பதிக்கிறது. தனது முதல் ஆட்டத்தில் தரவரிசையில் 44-ஆவது இடத்தில் உள்ள ஈக்குவடாரை சந்தித்தது. போட்டி நடுவரின் 'கிக்-ஆஃப்' விசிலுடன் இன்று போட்டித் தொடங்கியது.


 






முதல் பாதி நேரத்திற்குள் ஈகுவடார் அணியின் கேப்டன் என்னர் வலென்சியா 2 கோல்களை போட்டார். 15 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி  கிக் வாய்ப்பைப் பயன்படுத்தி 16ஆவது நிமிடத்தில் முதல் கோலையும், 31ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலையும் வலென்சியா வலைக்குள் செலுத்தினார்.


இது உலகக் கோப்பையில் அவர் வலைக்குள் செலுத்திய 5ஆவது கோல் ஆகும். என்னர் வலென்சியா காலில் ஏற்கனவே ஏற்பட்ட காயம் காரணமாக சிரமத்துடனேயே விளையாடினார்.  காலை ஊன்ற முடியாமல் ஊன்றி வெளியே சென்றார். பின்னர் 61 ஆவது நிமிடத்தில் மீண்டும் களத்திற்கு திரும்பினார்.


மஞ்சள் அட்டை
கத்தார் அணியின் அல்மோயிஸுக்கு நடுவர் மஞ்சள் அட்டை காண்பித்து எச்சரிக்கை விடுத்தார். அவர் வலென்சியாவுக்கு எதிரான ஃபவுல் செய்ததால் நடுவர் மஞ்சள் அட்டை காண்பித்தார்.


முதல் பாதியில் ஈகுவடார் ஆதிக்கம்
முதல் பாதி ஆட்டத்தில் ஈகுவடார் ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதி முழுவதும் போட்டியை நடத்தும் கத்தார் அணி சிறப்பாக செயல்படவில்லை. ஆனால், ஈகுவடார் ஆக்ரோஷமாக விளையாடியது.
மாற்றுவீரரையும் இரு அணிகளும் களமிறக்கியது. 76ஆவது நிமிடத்தில் வலென்சியா வெளியேறினார்.


90 நிமிடங்கள் முடிவில் கத்தார் அணி ஒரு கோலைக் கூட போடவில்லை. 5 நிமிட கூடுதல் நேரத்தில் அந்த அணி கோல் போடவில்லை. இதையடுத்து முதல் ஆட்டத்தில் ஈகுவடார் வெற்றி பெற்றது.


2019 ஆசிய கோப்பை சாம்பியனான கத்தார் அணி தோல்வியைத் தழுவியது. உலகக் கோப்பையை நடத்தும் ஓர் அணி முதல் ஆட்டத்தில் தோற்பது இதுவே முதல் முறையாகும்.






 


இதற்கு முன் நேருக்கு நேர்
கத்தார்-ஈக்குவடார் அணிகள் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் தலா 1 வெற்றியும், 1 ஆட்டம் டிராவிலும் முடிந்துள்ளது. 2018ஆம் ஆண்டில் நட்பு ரீதியிலான ஆட்டத்தில் கத்தார் அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை வீழ்த்தியது.


FIFA Football World Cup: தரவரிசையில் டாப்-10 இடங்களில் உள்ள கால்பந்து அணிகள்!


அல் பெய்த் ஸ்டேடியத்தில் இதற்கு முன்பு விளையாடிய 3 ஆட்டங்களிலும் கத்தார் வென்றது. இதற்கு முன்பு போட்டியை நடத்தும் அணி, லீக் சுற்றின் முதல் ரவுண்டில் தோல்வி அடைந்து வெளியேறியது என்ற சோகத்துக்குரியது தென் ஆப்பிரிக்கா. அந்த அணி 2010-இல் முதல் சுற்றுடன் வெளியேறியது.


அல் பேத் ஸ்டேடியம்  (Al Bayt Stadium)
அல்பேத் ஸ்டேடியத்தில் 60 ஆயிரம் பேர் வரை அமர்ந்து போட்டியை ரசிக்க முடியும். கத்தார்-ஈகுவடார் தொடக்க ஆட்டத்துடன் மொத்தம் 9 ஆட்டங்கள் இந்த மைதானத்தில் நடக்கின்றன. கத்தார் மற்றும் வளைகுடா மண்டலத்தில் நாடோடி மக்கள் பயன்படுத்திய கூடாரமான பேத் அல் ஷார் போன்று இந்த ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளது.