வெளிநாடுகளின் தான் பணிபுரிய வேண்டும் என காத்திருக்கும் இளைஞர்களுக்காகவே தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது அறிவித்துள்ளது.


குடும்பச்சூழலைக் கருதி வெளிநாடுகளுக்குச் சென்று வருமானம் ஈட்டிவரலாம் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால் அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு ஆட்சேர்ப்பு நிறுவனங்களுக்குச் சென்று பணத்தினை இழக்க நேரிடும் நிகழ்வுகள் எல்லாம் அரங்கேறியது.  இதனையடுத்து தான் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்வோரை பாதுகாக்கவும், குறைந்த செலவில் விசா எடுத்துத்தருவது தொடங்கி நல்ல  பணிகளில் பாதுகாப்பாக சேர்த்துவிடுவதற்காகவே  கடந்த 1978 ஆம் ஆண்டு தமிழக அரசு, தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது பெரும்பாலான மக்கள் பல்வேறு பணிகளுக்காக வெளிநாடுகளுக்குச்சென்று பணிபுரிவதற்கு இந்நிறுவனம் உதவிபுரிந்துவருகிறது.  மேலும் அவ்வப்போது இதன் மூலம் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகும். அதன்படி தற்போது பல்வேறு வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடப்பதாகவும், இதனை விருப்பமுள்ள இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.





குறிப்பாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், அரபு உணவு வகைகள் சமைக்கத் தெரிந்தவர்கள், வீட்டு வேலை செய்யத் தெரிந்த பெண்கள், பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ, ஐடிஐ பிரிவில் பிட்டர் முடித்தவர்கள், அயல்நாட்டு பணியைத் தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பினைப்பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊதியம் மற்றும் பணிவிவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைப்பேசி எண் (044-22505886/22502267) மூலமாகவும் அறிந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு இந்தப்பணி தொடர்பான விபரங்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு சென்றும் இப்பணிக்குறித்த தகவல்களைப்பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களை http://www.omcmanpower.com என்ற இணையதளத்தைப்பயன்படுத்தி வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பற்றிய விபரங்களை அறிந்துக்கொள்ளலாம்.





இந்த தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் வெளிநாடுகளுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவத்துறைச் சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் என அவர்களின் திறன்களில் அடிப்படையில் பணிக்கு அனுப்பிவைக்கப்படுகிறார்கள். குறிப்பாக வெளிநாட்டில் பணி வழங்கும் நிறுவனங்கள் தங்களது நாட்டின் மொழி, மேம்படுத்தப்பட்ட திறன் உள்ள வேலைநாடு நபர்களையே தேர்வு செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டுவதால் இதற்காகத் தேர்வு நடத்தி செவிலியர்கள் வெளிநாட்டுப்பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். மேலும் இவர்களுக்கு  அரம்ப நிலை ஊதியம் ஆண்டுக்கு ரூ.18 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பினை அதிகப்படுத்தும் நோக்கில், செவிலியர்களைத் தேர்வு செய்யும் ஹெல்த் எஜூகேஷன் இங்கிலாந்து நிறுவனத்துடனும்,  வீட்டுப்பணியாளர்களைத் தேர்வு செய்யும் ஏஐ டோரோ மேன் பவர் குவைத் நாடு மற்றும் இந்தியா டிரேட் எக்ஸ்பிஷன் என்ற நிறுவனத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு அதன்படி பல்வேறு வேலைவாய்ப்புகள் வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.