அரசுப்பணி போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளில் தேர்வர்கள் கலந்துகொள்ள அரசு அழைப்பு விடுத்துள்ளது.


கல்விக்கென தனித் தொலைக்காட்சி


தமிழ்நாடு அரசு, பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வி தொலைக்காட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறது. இதில் பல்வேறு ஆசிரியர்கள் கருத்தாளர்களாகப் பங்குபெற்று, தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர். 


தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின்‌ கீழ்‌ கல்வி தொலைக்காட்சி செயல்பட்டு வருகிறது. தினந்தோறும்‌ மாணவர்களுக்குப்‌ பாடப்பொருள்‌ உள்ளுறைப்‌ பயிற்சிகளை கல்வி தொலைக்காட்சி வழங்கி வருகிறது, அதேபோல தமிழ்நாடு அரசு தேர்வாணையப்‌ பணிகளுக்கான பயிற்சிகளையும்‌ அளிக்கிறது.


மத்திய அரசு நடத்தும்‌ போட்டித்‌ தேர்வுகளை‌ மாணவ - மாணவிகள்‌ எதிர்கொள்ளும்‌ வகையில்‌ பல்வேறு பயிற்சிகளை ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.


எந்தெந்த தேர்வுகளுக்கு பயிற்சி?


தமிழ்நாடு அரசு சார்பில் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டு, டிஎன்பிஎஸ்சி, ஆர்ஆர்பி, யூபிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளுக்கு உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கல்வி தொலைக்காட்சியிலும் பயிற்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.






இந்நிலையில் தற்போது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம், பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு வாரியம் மற்றும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் ஆகியவை நடத்தும் தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு அரசின் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உள்ளனர்.


பயிற்சி வகுப்புகள் எப்போது?


இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் டிசம்பர் 16ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது. காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. பின்னர், மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.


மேலும்‌ இது குறித்த கால அட்டவணை தொடர்பான விவரங்களை அறிய www.tamilnaducareersericestn.gov.in என்ற இணையதளத்தைத்‌ தொடர்பு கொள்ளவும்‌.