TCS, விப்ரோ, எச்.சி.எல். டெக்னாலஜீஸ், இன்போசிஸ் ஆகிய இந்திய மென்பொருள் நிறுவனங்கள் இந்தியாவில் விரைவில் ஒரு லட்சம் ஊழியர்களை பணியமர்த்த உள்ளன.


இந்தியாவில் தொடர் சரிவிலிருந்த மென்பொருள் துறை தற்போது மீண்டும் புத்துயிர் பெற தொடங்கி உள்ளது. அனைத்தும் டிஜிட்டல்மயமாகிவிட்ட இக்காலத்தில் மென் பொருளின் தேவை அதிகரித்து இருப்பதால் இந்தியாவின் முன்னணி மென் பொருள் நிறுவனங்களுக்கு வரும் பிராஜெக்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இத்தனை பிராஜெக்டுகளையும் செய்ய தற்போது இருக்கும் மென் பொருள் ஊழியர்களின் எண்ணிக்கை போதாது என்பதால் இந்த ஆண்டுக்குள் கூடுதலாக 1.20 லட்சம் ஊழியர்களை பணியில் சேர்க்க இந்தியாவின் 4 முக்கிய மென் பொருள் நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், விப்ரோ, இன்போசிஸ், எச்.சி.எல். ஆகிய நிறுவனங்கள் முடிவு செய்து உள்ளன.


2021 - 2022 நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் 50,000 ஊழியர்களை இந்த நிறுவனங்கள் புதிதாக வேலையில் சேர்த்து உள்ளன. வரும் 6 மாதங்களில் மட்டும் கூடுதலாக 1.02 லட்சம் பேரை பணியில் அமர்த்த இந்த நிறுவனங்கள் முடிவு செய்து உள்ளன. அதே இந்த மென்பொருள் நிறுவனங்களின் பிராஜெக்டுகளில் பிழைகள் தொழில்நுட்ப குறைபாடுகள் அதிகரித்து உள்ளதன் காரணமாகவே புதிதாக லட்சக்கணக்கான ஊழியர்களை நியமிக்க  இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் வேலையின்றி தவிக்கும் பட்டதாரிகள், இந்த ஆண்டு கல்லூரி படிப்பை நிறைவு செய்யும் மாணவர்கள் பெரும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இது குறித்து டி.சி.எஸ் நிறுவனத்தின் புதிய தலைமை மேலாண்மைத் துறை அதிகாரி மிலிந்த் லக்காட் தெரிவிக்கையில், கடந்த காலாண்டில் மட்டும் 43,000 பட்டதாரிகளுக்கு தங்கள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டு உள்ளார். ”நாங்கள் அளிக்கும் ஷிப்ட்-லெப்ட் பயிற்சிகள் புதியவர்களுக்கு வேலையிழப்பு ஏற்படுவதில் இருந்து தவிர்க்கிறது. அதே போல் குறிப்பிட்ட நேரத்துக்குள் பிராஜெக்டை நிறைவு செய்ய முடிகிறது” எனக் தெரிவித்து உள்ளார். அடுத்த அரையாண்டுக்குள் மேலும் 35,000 புதியவர்களை வேலையில் அமர்த்த டி.சி.எஸ் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனம் மட்டும் ஓராண்டில் 78,000 பேருக்கு வேலை கொடுத்து உள்ளது.


 


இன்போசிஸ் நிறுவனத்தை பொறுத்தவரை உலகின் அனைத்து மூலைகளுக்கும் நிறுவனத்தினை கொண்டு சென்று வருவாயை அதிகரிக்க முடிவு செய்து உள்ளது. வழக்கத்தை விட இம்முறை மென்பொருள் பயன்பாடு அதிகரித்து உள்ளதால் 2010 ஆம் ஆண்டுக்கு முந்தைய காலத்தில் ஏற்பட்ட மென்பொருளுக்கான தேவைகளை காட்டிலும் இப்போது அதிகரித்து உள்ளதாக இன்போசிஸ் தலைமை இயக்க அதிகாரி யு.பி.பிரவீன் ராவ் தெரிவித்துள்ளார். இன்போசிஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வையும் அறிவித்து உள்ளது. இந்த ஆண்டில் புதிதாக 45,000 பேரை வேலைக்கு எடுக்க இருப்பதாக பிரவீன் ராவ் கூறி உள்ளார்.



இதுவரை 8,100 பேரை கடந்த காலாண்டில் பணியில் சேர்த்ததாக விப்ரோ தெரிவித்துள்ளது. அடுத்த அண்டுக்குள் 25,000 புதியவர்களை வேலைக்கு சேர்க்க இருக்கிறது விப்ரோ. எச்.சி.எல். நிறுவனமும் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் 22,000 புதியவர்களையும், அடுத்த ஆண்டு 30,000 புதியவர்களையும் பணியில் சேர்க்க உள்ளது.