அமேசான் இந்தியா நிறுவனத்தின் பண்டிகை கால சிறப்பு விற்பனைகளால் ஒரு லட்சத்து பத்தாயிரத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.


அமேசான் இந்தியா நிறுவனம் தீபாவளி, ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு இம்மாதம் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் என்ற பெயரில் பண்டிகை கால சிறப்பு விற்பனையை செய்து வருகிறது. இதில் பல பொருட்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டன. பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் இந்த பண்டிகை கால விற்பனையின் மூலமாக மட்டும் வர்த்தகம் செய்து இருக்கிறது அமேசான்.


இது தொடர்பாக, அமேசான் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை, புனே, லக்னோ போன்ற நகரங்களில் அமேசானின் பண்டிகை கால சிறப்பு விற்பனையின் மூலமாக மட்டும் நேரடியாகவும் மறைமுகமாகவும் 1.10 லட்சம் பேர் குறுகிய கால வேலை வாய்ப்பை பெற்றதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் நிறுவனத்துடன் புதிதாக வர்த்தக தொடர்பு வைத்தவர்கள் எனவும், அவர்கள் சரக்குகளை ஏற்றுமதி செய்யவும், இறக்குமதி செய்யவும், பார்சல் செய்யவும், வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணியிலும் ஈடுபட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


அதே போல் புதிதாக அமேசானின் வாடிக்கையாளர் சேவை மையத்திலும் புதிதாக பலர் பணியில் சேர்ந்துள்ளதாகவும், இவர்களில் எந்த நேரத்திலும் வாடிக்கையாளர்களுக்கு உதவிடும் வகையில் வீடுகளில் இருந்து பணிபுரிந்ததாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. அமேசான் நிறுவனம் அக்டோபர் மாத தொடக்கத்தில் அறிவித்த வேலை வாய்ப்பு தினத்தின் மூலமாக மட்டும் 8,000 பேர் வேலை வாய்ப்பு பெற்று உள்ளனர்.


இந்தியாவில் 2025 ஆம் ஆண்டுக்குள் 10 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற தங்களின் குறிக்கோளை நோக்கி இந்த பகுதி நேர வேலை வாய்ப்பு திட்டங்கள் ஒரு படி முன்னேற்றி இருப்பதாக அமேசான் கூறியுள்ளது. இந்த ஆண்டு 50 – 60% பெண் ஊழியர்களையும், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களை அதிகளவில் பணியில் சேர்த்ததாக அமேசான் தெரிவித்து இருக்கிறது.


பண்டிகை கால சிறப்பு விற்பனையின்போது அமேசானில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான ஆர்டர்கள் குவிந்ததாகவும், இந்த ஆர்டர்களை முறையாக கொண்டு சேர்க்க பழைய ஊழியர்களுடன் புதிதாக வேலை வாய்ப்பு பெற்ற 1.10 லட்சம் பேரும் பணிபுரிந்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய வேலை திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கானோருக்கு பொருளாதார சுதந்திரமும், வாழ்வாதாரமும் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ள அமேசான் நிறுவனம், அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் சமமான மகிழ்ச்சியையும் அன்பையும் இந்த பண்டிகை காலத்தில் முயற்சித்ததாக அமேசான் கூறியுள்ளது.