விழுப்புரம் : படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளிடமிருந்து உதவித்தொகை பெற விண்ணபிக்கலாம்.


விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் 01.07.2024 அன்று தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்பொழுது பெறப்படுகின்றன.


கல்வித்தகுதி 


பத்தாம் வகுப்பு (தோல்வி). பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து 30.06.2024 அன்றைய தேதியில் ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓர் ஆண்டு நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.


திட்டத்தில் பயன்பெற மனுதாரரின் தகுதிகள்


இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 30.06.2024 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். அரசாணை (நிலை) எண்.127. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை நாள் 25.07.2019 வாயிலாக இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையினை இருமடங்காக உயர்த்தி மாதமொன்றுக்கு பத்தாம் வகுப்பு தோல்விக்கு ரூ.200/- பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.300/- மேல்நிலைக்கல்வி தேர்ச்சிக்கு ரூ.400/- பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.600/- மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு ரூ.600/- மேல்நிலை கல்வி தேர்ச்சிக்கு ரூ.750/-ம் மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1000/- என்றவாறு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை


உதவித்தொகை விண்ணப்பப்படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.


https://employmentexchange.tn.gov.in  என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெற்றவர்கள் மீள விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாவார்கள். மேலும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களின் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.


01.07.2024 உடன் தொடங்கும் காலாண்டிற்கான உதவித்தொகை விண்ணப்பங்களை மனுதாரர்கள் 2024 ஆகஸ்ட் 31 -ம் தேதிவரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் விழுப்புரத்தில் இயங்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப்பிரிவில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப்புத்தகத்துடன் நேரில் சமர்ப்பிக்கலாம்.


வேலைவாய்ப்பற்ற அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு காலாண்டிற்கு ஒருமுறை வழங்கப்படும் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகையை சிறப்பு நேர்வாக மாதந்தோறும் வழங்குவதற்கு அரசால் அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.