பிரதமர் நரேந்திர மோடியின் அரசில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 7ஆவது பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். மேலும் இந்த நிதியாண்டின் முதல் பட்ஜெட்டும் இதுவாகும். இதில், வேலைவாய்ப்பு சார்ந்து பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அதில், வேலைக்குச் சேரும் இளைஞர்கள் அனைவருக்கும் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகை


அதைத் தொடர்ந்து நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை  (Employment Linked Incentive) என்ற பதத்தைப் பயன்படுத்தினார். இதன்படி பட்ஜெட்டில் ஊழியர்களுக்கு மட்டுமல்ல, நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.


உற்பத்தித் துறைகளில் வேலைவாய்ப்பு உருவாக்கம் (Job Creation in Manufacturing)


உற்பத்தித் துறைகளில் முதல் முறையாக வேலைக்குச் செல்லும் நபர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக இந்தத் திட்டம் அறிவிக்கப்படுகிறது.  இதன்படி, முதல் 4 ஆண்டு பணிக் காலத்தில் ஈபிஏ (EPA contributions) பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டு, ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை உருவாக்கப்படும். இதன்மூலம் 30 லட்சம் ஊழியர்களும் நிறுவனங்களும் பயனடைவர்.


நிறுவனங்களுக்கு ஆதரவு (Support for Employers)


"Support to Employers" திட்டம் அனைத்துத் துறைகளிலும் கூடுதல் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில், அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்படி மாதத்துக்கு ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கும் ஒவ்வொரு ஊழியருக்கும் வழங்கும் வருங்கால வைப்பு நிதி, 2 அண்டுகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் வரை, திரும்ப அளிக்கப்படும். இதன்மூலம் 15 லட்சம் தனி நபர்களுக்கு வேலை உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  


ஏற்கெனவே ’’முறைப்படுத்தப்பட்ட துறைகளில் புதிதாக வேலைக்குச் சேரும் இளைஞர்கள் அனைவருக்கும் ஒரு மாத ஊதியத்தை அரசே வழங்கும். எனினும் அவர்கள் பெறும் மாத ஊதியம் ரூ.1 லட்சத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும். அரசு வழங்கும் தொகை அதிகபட்சம் ரூ. 15 ஆயிரம் ஆக இருக்கும். இதனால் 2.1 கோடி இளைஞர்கள் பயனடைவார்கள்’’ என்ற அறிவிப்பையும் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு இருந்தார். 


அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு, புதிதாக வேலைக்குச் சேர உள்ள இளைஞர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.