முறைப்படுத்தப்பட்ட துறைகளில் புதிதாக வேலைக்குச் சேரும் இளைஞர்கள் அனைவருக்கும் ஒரு மாத ஊதியத்தை அரசே வழங்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடியின் அரசில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 7ஆவது பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். மேலும் இந்த நிதியாண்டின் முதல் பட்ஜெட்டும் இதுவாகும். இதில், வேலைவாய்ப்பு சார்ந்து பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அதில், வேலைக்குச் சேரும் இளைஞர்கள் அனைவருக்கும் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, ’’முறைப்படுத்தப்பட்ட துறைகளில் புதிதாக வேலைக்குச் சேரும் இளைஞர்கள் அனைவருக்கும் ஒரு மாத ஊதியத்தை அரசே வழங்கும். எனினும் அவர்கள் பெறும் மாத ஊதியம் ரூ.1 லட்சத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும். அரசு வழங்கும் தொகை அதிகபட்சம் ரூ. 15 ஆயிரம் ஆக இருக்கும். இதனால் 2.1 கோடி இளைஞர்கள் பயனடைவார்கள்.


என்ன தகுதி?


எனினும் இந்த இளைஞர்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (இபிஎஃப்ஓ) பதிவு செய்திருக்க வேண்டும். இவர்களுக்கு 3 தவணை முறைகளில் அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் நேரடியாக வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.






இதுதவிர உற்பத்தித் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் குறைந்த மாத வருமானம் கொண்ட நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.