தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உதவி பிரிவு அலுவலர் பதவிக்கான 3ஆம் கட்ட மூலச் சான்றிதழ் சரிபார்ப்பானது, வரும் ஜனவரி 6-ஆம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜனவரி 6 ஆம் தேதி கல்விச் சான்றிதழ் மற்றும் அனைத்து மூலச் சான்றிதழ்களையும் டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்துக்கு நேரில் கொண்டு வர வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
மேலும், டி.என்.பி.எஸ்.சி மூலம் நடத்தப்படும் 15 தேர்வுகளுக்கான முடிவு வெளியாகும் கால அட்டவணையை வெளியிடப்பட்டுள்ளது.
குரூப்-4 தேர்வு முடிவு பிப்ரவரி மாதமும், நில அளவையளருக்கான முடிவு வரும் ஜனவரி மாதமும் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. குரூப் 2 முதன்மை தேர்வுகள் பிப்ரவரி 25-ந் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 4:
குரூப் 4 அரசுப் பணிகளுக்கு 7,301 இடங்கள் மற்றும் 81 விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்கள் இருந்த நிலையில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளுக்காக இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு மொத்தமுள்ள 7,382 காலி இடங்களை நிரப்ப உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
குரூப் 4 தேர்வுக்காக, இதற்கு முன்பு இல்லாத வகையில் 21,85,328 பேர் விண்ணப்பித்தனர். இதற்கு முன்னதாக 2017-ம் ஆண்டில் 20.76 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த முறை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 21.8 லட்சத்தைக் கடந்தது. இதில், பெண்களே அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்தனர்.
இந்தத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 316 தாலுகா பகுதிகளில் 7,689 மையங்களில் ஜூலை மாதம் நடைபெற்றது. சென்னையில் மட்டும் 503 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன. தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக 534 பறக்கும் படைகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டன. 4,012 தலைமை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். 58 ஆயிரத்து 900 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். கருவூலத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு ஆயுதம் ஏந்தியவாறு பாதுகாப்பு அளிக்கும் குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டன
முடிவுகளில் தாமதம்:
இவர்களுக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மீண்டும் தாமதமான நிலையில் டிசம்பர் முதல் வாரம் வெளியாகும் என்று தகவல் வெளியானது. இந்நிலையில், பிப்ரவரி மாதம் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது, தேர்வர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதனால் வேலைவாய்ப்பு மற்றும் அடுத்தகட்டத் தேர்வுகள் உள்ளிட்டவற்றுக்குத் திட்டமிட்டிருந்த தேர்வர்கள் கவலையில் உள்ளனர். இதனால், டிஎன்பிஎஸ்சி விரைந்து தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2023 தேர்வு எப்போது?
குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ( 2023 ) நவம்பரில் வெளியாக உள்ளது. அதற்கான தேர்வு 2024 பிப்ரவரியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read:CBSE Date Sheet 2023: வெளியான தேதிகள்; சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொது தேர்வு எப்போது?- விவரம்!...