CBSE Class 10 and 12 Board Exam Date: 2023ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ வாரியத்தின் 10, 12ஆம் வகுப்பு பொது தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது.


கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் இடையிடையே மூடப்பட்டன. இதனால் கற்றலும் கற்பித்தலும் பாதிக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு,  மாணவர்களின் கடந்த கால செயல்திறன், காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அதுபோன்ற எதிர்பாராத சூழல் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக, இரு பருவப் பொதுத் தேர்வு முறையை சிபிஎஸ்இ அறிவித்தது.


புதிய தேர்வு முறையை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், மாதிரி கேள்வித் தாள்களும், மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்டமும் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டன. 


இந்த நிலையில், 2022- 23ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது. இந்தத் தேர்வு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. பிப்ரவரி 15 முதல் இந்தத் தேர்வுகள் தொடங்குகின்றன.





10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வை 34 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதில் 18 லட்சம் பேர் 10ஆம் வகுப்பு மாணவர்கள் ஆவர். 12ஆம் வகுப்பில் இருந்து 16 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். 


தேர்வு அட்டவணை குறித்து முழுமையாக அறிய: cbse.gov.in மற்றும் cbse.nic.in ஆகிய இணையதளங்களை க்ளிக் செய்ய வேண்டும்.











மாநில வாரியத் தேர்வுகள் எப்போது?


தமிழ்நாடு மாநில கல்வி வாரியம் சார்பில் மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 வரை 12ஆம் வகுப்புத் தேர்வு நடைபெற உள்ளது. 7,600 பள்ளிகளில், 8.8 லட்சம் மாணவர்கள் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுத உள்ளனர். 11ஆம் வகுப்புத் தேர்வை 8.5 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். மார்ச் 14ஆம் தேதி இவர்களுக்கு தேர்வு தொடங்கும் நிலையில், ஏப்ரல் 5ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. 10ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 6ஆம் தேதி அன்று தொடங்குகின்றன. ஏப்ரல் 20ஆம் தேதி வரை இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். 


கல்லூரி நுழைவுத் தேர்வுகளான நீட், ஜேஇஇ, க்யூட் உள்ளிட்டவற்றுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சிபிஎஸ்இ விரைந்து தேதிகளை அறிவிக்க வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், சிபிஎஸ்இ பொதுத் தேர்வு தேதிகளை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.