தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வி துறையில் உள்ள ஆசிரியர் காலியிடங்களை ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தேர்வு வாரியமான டிஆர்பி தேர்வு நடத்தி நிரப்பி வருகிறது. அந்த வகையில் 2022ஆம் ஆண்டிற்கான டிஆர்பி தேர்வுகளுக்கான வருட திட்டத்தை வெளியிட்டுள்ளது.
அதன்படி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2022ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஏப்ரல் மாதம் 2ஆவது வாரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பாணை அடுத்த மாதம் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவை தவிர இரண்டாம் நிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பு மே மாதம் வெளியாகி ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வில் 4989 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
அதேபோல் உயர்கல்வித்துறையில் கலை கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களுக்கான தேர்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என்று தெரிகிறது. அதற்கான அறிவிப்பு ஜூலை மாதத்தில் வெளியாகும். இந்தத் தேர்வில் தோராயமாக 1334 காலி பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 493 காலி பணியிடங்களுக்கான தேர்வு வரும் நவம்பர் மாதம் இரண்டாவது வாரம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அரசு பொறியியல் கல்லூரிகளில் 104 பேராசிரியர்களுக்கான காலிபணியிடங்களுக்கு வரும் டிசம்பர் மாதம் 2ஆவது வாரத்தில் தேர்வு நடைபெறும் என்று இந்த அறிவிப்பில் வெளியாகியுள்ளது.
மொத்தமாக இந்தாண்டு 9494 காலிபணியிடங்கள் டிஆர்பி தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளதாக இந்த வருட திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒரு சில தேர்வுகளுக்கான பணியிடங்கள் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 2022ஆம் ஆண்டிற்கான ஆசிரிய தகுதி தேர்விற்கான காலிபணியிடங்கள் குறித்து இந்த திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. அடுத்த மாதம் வெளியாகும் தேர்விற்கான அறிவிப்பில் இதற்கான காலி பணியிடங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒரு சில தேர்வுகளுக்கான காலி பணியிடங்கள் மாறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: TNPSC Group 4 Preparation | உள்ளங்கையில் அரசுப் பணி 5: தமிழ் இலக்கணம் இனி எளிது... இனிது..!