திருவண்ணாமலை: திருவண்ணாமலையில்  இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் போன்ற பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.


இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; 


தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் போன்ற 3,359 பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் மூலம் பணியாளர்களை தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதியாக குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றும், வயது வரம்பு 18-வயது முதல்-32 வயதுக்குட்பட்ட வேலைநாடுநர்கள் இத்தேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் BC, BC(M), MBC/DNC, 34 வயதாகவும், SC, SC(A), ST, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 37-வயதாகவும் சலுகைகளாக அளிக்கப்படுகிறது. முதலாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழியை பயிற்று மொழியாகக் கொண்டு பயின்றிருக்கும் (PTSM) விண்ணப்பதாரர்களுக்கு தேர்வின் ஒவ்வொரு நிலையிலும் மொத்த காலிப் பணியிடங்களில் 20% முன்னுரிமை அளிக்கப்படும்.


 




 


இட ஒதுக்கீடு விகிதம்; 


மொத்தப் பணியிடங்களில் அங்கீகரிக்கப்பட்ட 16 விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு 10%, வாரிசுதார்களுக்கு 10%, முன்னாள் இராணுவத்தினருக்கு 5%, ஆதரவற்ற விதவைகளுக்கு 3% ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும், அரசு விதிகளின்படி வகுப்புவாரி இட ஒதுக்கீடு வழங்கப்படும். அசல் சான்றிதழ் சரி பார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல் தகுதித் தேர்வு, உடல் திறன் போட்டிகளுக்கு மொத்த காலிப்பணியிட எண்ணிக்கையில் 1:5 என்ற விகிதாசாரப்படி விண்ணப்பதார்கள் அழைக்கப்படுவார்கள். விண்ணப்பிக்க விண்ணப்பக்கட்டணமாக ரூ.250/- செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு 18.08.2023 முதல் 17.09.2023 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் முழு விவரங்கள் https://www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


பயிற்சி வகுப்பு நேரங்கள்; 


திருவண்ணாமலை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் நேரடியாக இலவச பயிற்சி வகுப்புகள் (01.09.2023) அன்று முதல் மாலை 02.00 மணி முதல் 4.00 மணி வரை வார நாட்களில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் 04175-233381 என்ற தொலைப்பேசி எண்ணில் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு பயன்பெறுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.


One Nation One Election: எதிர்க்கட்சிகள் ஷாக்..! ”ஒரே நாடு, ஒரே தேர்தல்” குறித்து ஆராய சிறப்பு குழு - மத்திய அரசு அறிவிப்பு